டிஜிட்டல் முறையில் அபராதம் வசூலிக்கும் முறைக்கு வாகன ஓட்டிகள் பெரும் வரவேற்பு
டிஜிட்டல் முறையில் அபராதம் வசூலிக்கும் புதிய திட்டத்திற்கு வாகன ஓட்டிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக, போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-
போக்குவரத்து விதிமீறல்களை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரொக்கப்பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் அபராதம் வசூலிக்கும் முறைக்கு வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
48 மணி நேரம் அபராதத்தை செலுத்த கால அவகாசம் கொடுத்துள்ளோம். ஆங்காங்கே வழக்கம்போல போக்குவரத்து போலீசார் அபராத தொகைக்கான இ-சலானை கொடுத்து வருகிறார்கள். இ-சலானை வாங்கிக்கொண்டு பெரும்பாலான வாகன ஓட்டிகள் ‘கிரெடிட் கார்டு’ அல்லது ‘டெபிட் கார்டு’ மூலம் அங்கேயே அபராத தொகையை செலுத்திவிடுகிறார்கள். இதுவரையில் புகார்கள் எதுவும் வரவில்லை. பணபரிமாற்றம் இல்லாததால் பிரச்சினை இல்லை. இந்த திட்ட அமலாக்கம் பற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர்கள் கருத்து
டிஜிட்டல் முறையில் அபராத தொகையை வசூலிக்கும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் பிரச்சினை எதுவும் இல்லை என்றும், புதிய திட்டம் சிறப்பாக உள்ளது என்றும், வாகன ஓட்டிகள் எந்த வித வாக்குவாதம், பிரச்சினை இல்லாமல் அபராதத்திற்கான இ-சலானை வாங்கிச் செல்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story