சென்னை தீவுத்திடல் அருகே மரம் தீப்பிடித்தது வெயிலின் தாக்கத்தினால் தீ ஏற்பட்டதாக வந்த வதந்தியால் பரபரப்பு
தீவுத்திடல் அருகே பழமைவாய்ந்த மரம் நேற்று திடீரென்று தீப்பிடித்து கொண்டது.
சென்னை,
சென்னை தலைமைச்செயலகம் செல்லும் வழியில் உள்ள தீவுத்திடல் அருகே ராணுவ அதிகாரிகள் அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகம் செல்லும் வழியில் உள்ள பழமைவாய்ந்த மரம் நேற்று திடீரென்று தீப்பிடித்து கொண்டது. மரத்தில் இருந்து கரும்புகை வெளியே வருவதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரரிடம் தகவல் கொடுத்தனர்.
அவர் உடனே அங்கு வந்து பார்த்துவிட்டு, உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். 20 நிமிடம் ஆகியும் தீயணைப்பு வண்டி வராததால், மீண்டும் அந்த போலீஸ்காரர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீப்பிடித்து எரிவதை கூறினார். பெரிய அளவில் தீப்பிடித்து இருக்கிறதா? கண்டிப்பாக வர வேண்டுமா? என்று கேட்டனர். இதனால் அந்த போலீஸ்காரர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர், மரத்தின் உச்சியில் தீப்பிடித்து இருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னார். அடுத்த 10-வது நிமிடத்தில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர். அந்த வழியாக சென்றவர்களில் பலர், வெயிலின் தாக்கத்தினால் மரம் தீப்பிடித்துக்கொண்டதாக பரபரப்பாக பேசிக்கொண்டனர். ஆனால், மரத்தின் கீழ் கிடந்த காய்ந்த மரக்கிளைகளை எரித்ததில் தீப்பரவி, மரத்தின் உச்சியில் பெரிய கிளையில் தீப்பிடித்தது அதன்பிறகு தான் தெரியவந்தது.
Related Tags :
Next Story