3 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பசுமாடு, காளை விடும் விழாவில் கிடைத்தது


3 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பசுமாடு, காளை விடும் விழாவில் கிடைத்தது
x
தினத்தந்தி 12 May 2018 10:30 PM GMT (Updated: 12 May 2018 10:30 PM GMT)

3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன பசுமாடு, காளைவிடும் திருவிழாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

வேலூர், 

வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்தவர் சத்தியா என்கிற குட்டியப்பன். இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்றபோது இவருடைய மாடுகளில் ஒரு பசுமாடு வழிதவறி சென்றுவிட்டது. 3 வருடங்களுக்கு மேலாகியும் மாடு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் கே.வி.குப்பம் பகுதியில் காளைவிடும் திருவிழா நடைபெற்றது. காளைவிடும் திருவிழாவுக்கு சத்தியா என்கிற குட்டியப்பன் சென்றிருந்தார். அங்கு போட்டிக்கு அழைத்துவரப்பட்டிருந்த காளைகளுடன், காணாமல்போன சத்தியாவின் பசுமாடும் நின்றது. அதை பார்த்த அவர், பசுமாட்டை அழைத்துவந்தவரிடம் சென்று விசாரித்தார். அப்போது அவர் மேட்டுஇடையம்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த மாட்டை சந்தையில் வாங்கியதாக கூறினார். ஆனால் சத்தியா தனது மாடு என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

வளர்த்தவருக்கு கன்றுகுட்டிகள்

பின்னர் இதுகுறித்து சத்தியா சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மேட்டுஇடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவரை சத்துவாச்சாரி போலீஸ்நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது முதலில் பசுமாட்டை சந்தையில் வாங்கியதாகவும், அது தனக்கு சொந்தமான மாடு என்றும் அவர் கூறினார். பின்னர் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் வழிதவறி வந்த மாட்டை பிடித்து வளர்த்துவந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

மாடு காணாமல்போய் 3 ஆண்டுகளுக்குமேல் ஆனதால் 2 கன்றுகளை ஈன்றிருந்தது. இதனால் இருவரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாட்டின் உரிமையாளர் சத்தியா என்கிற குட்டியப்பன் மாட்டை தன்னிடம் ஒப்படைக்குமாறும், 3 ஆண்டுகளாக மாட்டை வளர்த்த மேட்டுஇடையம்பட்டியை சேர்ந்த நபரிடம் 2 கன்றுகுட்டிகளை ஒப்படைக்கவும் சம்மதித்தார்.

அதன்பேரில் மாடு அதன் உரிமையாளர் சத்தியா என்கிற குட்டியப்பனிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 கன்றுகுட்டிகளும் மேட்டு இடையம்பட்டியை சேர்ந்த நபரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story