மாவட்ட செய்திகள்

தினம் ஒரு தகவல் : பின்கோடு + "||" + Day one Information: Pincode

தினம் ஒரு தகவல் : பின்கோடு

தினம் ஒரு தகவல் : பின்கோடு
நாட்டில் ஒரே பெயரைக் கொண்ட பல ஊர்கள் இருக்கின்றன.
இன்றைய மதுரையை ஆங்கிலேயர்கள் மதுரா என்று அழைத்தார்கள். இதனால் மதுரைக்கு வரும் கடிதங்கள் பல வட நாட்டில் இருக்கும் கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவிற்கு போய்விடும். இந்த பெயர் குழப்பத்தை தீர்ப்பதற்காகவே பண்டித ஜவஹர்லால் நேரு மதுரா என்ற ஆங்கிலப் பெயரை மதுரை என்று மாற்றினார். அதன்பின் மதுரா, மதுரை குழப்பம் தீர்ந்தது.


ஆனாலும் இந்திய தபால்துறை தொடர்ந்து குழப்பங்களை சந்தித்தே வந்தது. தமிழகத்தில் கூட ஒரே பெயரைக் கொண்ட பல ஊர்கள் கிராமங்கள் இருக்கின்றன. ஒத்தக்கடை என்ற பெயர் கொண்ட இடங்கள் அனேகமாக ஒரு மாவட்டத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டோ இருக்கிறது. திருப்பத்தூர் என்பது வேலூர் மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும் உள்ளது. திருப்புவனம் என்பது தஞ்சை மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும் உள்ளது.

இப்படி நாடு முழுவதும் ஏகப்பட்ட பெயர் குழப்பங்கள். இவற்றை சரி செய்வதற்காக 1972 ஆகஸ்டு 15 அன்று பின்கோடு என்ற நடைமுறையை தபால்துறை கொண்டு வந்தது. பின்கோடு என்றால் ‘போஸ்டல் இன்டெக்ஸ் நம்பர்’ என்று அர்த்தம். மொத்தம் 6 இலக்கம் கொண்ட இந்த எண் குறிப்பிட்ட தபால்நிலையம் எங்கிருக்கிறது என்பதை சொல்லிவிடுகிறது. அதனால் கடிதங்கள் எந்தவித பெயர் குழப்பங்களும் இல்லாமல் சரியான முகவரிக்கு விரைவாக சென்று சேர்ந்தன.

நமது தபால்துறை 9 மண்டலங்களைக் கொண்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பின்கோடில் உள்ள முதல் இலக்க எண் எந்த மண்டலம் என்பதை குறிக்கிறது. அதன்படி 1 என்ற எண்ணில் ஆரம்பிக்கும் பின்கோடு டெல்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் அடங்கிய மண்டலத்தை குறிக்கும். 2-ம் எண்ணில் தொடங்கும் பின்கோடு உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங் களைக் குறிக்கும். 3 என்ற எண்ணில் ஆரம்பிக்கும் பின்கோடு ராஜஸ்தான், குஜராத், டாமன்டையூ, நாகர் ஹவேலி ஆகியவற்றையும், 4 என்ற எண்ணில் ஆரம்பமாகும் பின்கோடு கோவா, மராட்டியம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களையும் குறிக்கிறது. 5 எண்ணில் ஆரம்பமாகும் பின்கோடு ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங் களையும், 6 என்ற எண்ணில் ஆரம்பிக்கும் பின்கோடு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களையும் அடையாளம் காண உதவுகிறது.

7 என்ற எண்ணில் ஆரம்பமாகும் பின்கோடு ஒடிசா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிஜோராம், திரிபுரா, மேகாலயா, அசாம், சிக்கிம், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளை குறிக்கும். 8-ம் எண்ணில் தொடங்கும் பின்கோடு பீகார், ஜார்கண்ட் மாநிலங்களை குறிக்கும். இந்த 8 மண்டலங்களும் பொதுமக்கள் உபயோகத்துக்கானவை. 9-வது மண்டலம் முழுக்க முழுக்க ராணுவத்திற்கானது. 9 என்ற எண்ணில் ஆரம்பமாகும் பின்கோடு மண்டலம் என்பது ராணுவ தபால்நிலையத்தையும், ராணுவ முகாம்களையும் குறிக்கும். இதில் ராணுவ கடிதப் போக்குவரத்தும், ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்திற்கு அனுப்பும் கடிதங்களும் பரிமாறப்படுகின்றன.

பின்கோட்டில் வரும் இரண்டாவது இலக்க எண் துணை மண்டலங்களைக் குறிக்கும். 6-வது மண்டலத்தில் தமிழ்நாடு வந்தாலும், அதன் அடுத்த இலக்கமான 0, 4 என்பது தமிழ்நாட்டைக் குறிக்கும். அதாவது 60 முதல் 64 வரை உள்ள எண்கள் தமிழக தபால்துறையை குறிக்கும். மூன்றாவது இலக்கம் வகைப்படுத்தப்பட்ட தபால் மாவட்டங்களை குறிக்கும். அதற்கடுத்து வரும் மூன்று இலக்கங்களும் குறிப்பிட்ட தபால்நிலையத்தை குறிக்கும். பின்கோடு என்கிற அஞ்சல் குறியீட்டு எண் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பல குழப்பங்கள் முடிவுக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.