அன்னையைப் போல் ஒரு தெய்வம் உண்டோ?


அன்னையைப் போல் ஒரு தெய்வம் உண்டோ?
x
தினத்தந்தி 13 May 2018 6:48 AM GMT (Updated: 13 May 2018 6:48 AM GMT)

இன்று (மே இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை) அன்னையர் தினம்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், மாதா பிதா குரு தெய்வம் என்பன முதிய மொழிகள். தாயைத் தெய்வமாகக் கொண்டாடும் பண்பாடு நம் தமிழ்ப் பண்பாடு.

சொர்க்கம் எங்கே இருக்கிறது என்று ஒருவர் கேட்டாராம். அது தாயின் மடியில் இருக்கிறது என்று மற்றொருவர் பதில் சொன்னாராம். தாய்நாடு, தாய்மொழி என்பதில் தாய்க்கு முதன்மை கொடுக்கிறோம். தன் பசியைப் பொறுத்துப் பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பவள் தாய்.

பத்து மாதம் குழந்தையை வயிற்றில் சுமப்பவள். சாதாரண மனிதர் ஒருவர் குழவிக்கல்லை வயிற்றில் கட்டிக் கொண்டு நடந்து, வேலை செய்து, படுத்து எழுந்து குனிந்து நிமிர்ந்து பல மாதங்கள் தடைப்படாமல் வேலை செய்திடுவாரா? இயலுமா? தாய் ஒருத்தியால்தான் அது இயலும்; முடியும்.

காதலி ஒருத்தி, ‘நம் திருமணம் நடைபெற வேண்டுமானால் உங்க அம்மா இருக்கக் கூடாது. அம்மாவின் இதயத்தை வெட்டிக் கொண்டு வந்து கொடுத்தால் உங்களை மணம் முடிப்பேன்’ என்றாளாம். அந்தக் காதலனும் தன் தாயின் இதயத்தை எடுத்துக் கொண்டு காதலியை நோக்கிச் செல்கிறான். வழியில் கல் தடுக்கி விழப் போகும் நிலையில் ‘மகனே, கல் பட்டுக் கால் வலிக்கிறதா?’ என்று தாயின் இதயம் கேட்டதாகக் கற்பனைக் கதை ஒன்று உண்டு. தான் இறந்துவிட நேரிட்டாலும் தன் மகன் துன்பம் படக்கூடாது என்றே தாயுள்ளம் நினைக்கும்; கண்ணீர் விடும். கதறும்.

தனக்கு எத்தகைய துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்பவள், வாங்கிக் கொள்பவள் தாய். ஆனால், தன் குழந்தைக்கு ஒரு எறும்பு கடித்தால் கூடத் தாங்க மாட்டாள். தன்னை அடித்தாலும் பொறுத்துக் கொள்ளும் தாய், தன் குழந்தை மேல் அடி விழாமல் அணைத்துக் கொண்டு காப்பாள்.

ஒரு தாய்க்கு, தான் பெற்று வளர்த்த குழந்தை இறந்து விடுகிறது. குழந்தைக்கு உயிர்பிச்சை வேண்டும் என்று புத்தரிடம் ஓடோடிச் செல்கிறாள் அந்தத் தாய். மாண்ட பிள்ளை மீண்டு வந்திடாதா என்ற ஏக்கத்தில் துடிக்கிறது தாயுள்ளம்.

கண்ணில் நித்திரை நீக்கிக் காத்த பிள்ளை! நெஞ்சில் கிடத்தி வளர்த்த பிள்ளை! என்று புலம்புகிறாள். பின்னி முடிச்சிடம்மா பிச்சிப்பூ சூட்டிடு அம்மா என்னும் மொழிகள் இனி எக்காலம் கேட்பேன் ஐயா என்று கதறுகிறாள்.

புத்தர் கூறினார்: யாருமே இறக்காத வீட்டில் சென்று ஒருபிடி கடுகு கொண்டு வா என்று அனுப்புகிறார் தாயை. இறப்பு இல்லாத வீடு இல்லை என்று மனம் ஆறுதல் அடைகிறாள் அந்தத் தாய்.

பூம்புகாரில் பட்டினத்தடிகள் தாய்க்குக் கொள்ளி வைக்க வேண்டிய சோக காலம் சூழ்ந்தபோது அவர் பாடியது:

முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள் சுமந்து அந்தி பகலா சிவனை ஆதரித்துத் தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயர் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன் என்று கதறினாராம்.

பெற்ற மகன் வீரனாக வர எண்ணியவள் சங்கத் தாய். கணவன், அண்ணன், தந்தையாரும் போரில் மடிய சின்னஞ் சிறு மகனைப் போருக்கு அனுப்பிய வீரத்தாயர் வாழ்ந்த மண் இது. அரச குமாரனே விரும்பிய மணிமேகலையைத் துறவியாக்கி, பிணியையும் பசியையும் தீர்க்க சமூகத்திற்குத் தத்தம் செய்த தாய் மாதவி. தன் மகனைச் சான்றோன் எனக் கேட்பதில் மகிழ்ந்த தாய் திருவள்ளுவர் காலத் தாய். நீதியை நிலைநாட்ட பசுவின் கன்றைத் தேர்க்காலால் கொன்ற அநீதிக்காகத் தன் மகனைக் கொன்று நீதி, நிலைநாட்டிய மன்னன் வாழ்ந்த மண் நம் தமிழ் மண்.

நாம்தான் படிக்கல. நம் மகனாவது படிக்க வேண்டுமே என்று பத்து வீடுகளில் பாத்திரம் தேய்த்து, தேய்ந்து போன அன்னையர்கள் இன்றும் வாழ்கிறார்கள். தாய் எப்போது உண்கிறாள்? எப்போது உறங்குகிறாள்? எப்போது எழுகிறாள்? பிள்ளைகளுக்குத் தெரியுமா? இப்படித் தியாகத் தாயர் இன்றும் பிள்ளைகளுக்காக வாழ்கிறார்கள்.

இத்தகைய தாயை முதியோர் இல்லத்தில் விட்டு விடுகிறார்களே. மதுரையில் என் பல்கலைக்கழகக் களப்பணியில் முதியோர் இல்லத்தில் மிகுதியாக இருப்பவர் ஆண்களா, பெண்களா என்று ஆராய்ந்தேன். விடை பெண்களே என்பது. தாயை எட்டி உதைக்கிறார்களே; கொலையும் செய்து விடுகிறார்களே சிலர்.

எப்படியம்மா மனம் வருகிறது? குடியிருந்த வயிறு கோவிலல்லவா! நிலத்திற்காக, நகைக்காகத் தாயை அடிப்பது சரியா? அவள் கண்களில் நீர் வரச் செய்வது, பெற்ற வயிறைப் பத்தி எரியவைப்பது பிள்ளைகளுக்கு நல்லதா? அப்போதும் அந்தத் தாய் தன் மகன் நன்றாக இருக்கட்டும் என்றுதான் எண்ணுகிறாள். அவர்தான் அன்னை. அதுவே அன்னையின் சிறப்பு.

ஒருகாலத்தில் பெயருக்கு முதல் எழுத்துப் போடும்போது தாயினுடைய பெயரின் முதல் எழுத்தையே போடுவது பழக்கமாக இருந்தது. இப்பழக்கம் இன்றும் குமரி மாவட்டத்திலும் பழந்தமிழ்நாடான கேரள மாநிலத்தின் தென்பகுதியிலும் வழங்குகின்றது. தமிழ்நாட்டில் பெண்ணை முன்னிறுத்தி அமைக்கப்பட்ட அம்மன் கோவில்கள் மிகுதி.

அன்பு தழைக்க, அறம் நிலைக்க, அருள் துளிர்க்கக் காரணமாக இருப்பது தாய்மை. தியாகம், கடமை, பொறுமை, அன்பு, பாசம் இவை முகிழ்ப்பதும் தாய்மையில். அந்தப் தாய்மையே ஏசுவையும், நபிகள்நாயகத்தையும், சித்தார்த்தரையும், காந்தியடிகளையும் படைத்தது.

‘ஈன்று புறந்தருதல் என் தலைக் கடன்’ என்று தாயின் கடனைக் கூறுகிறது புறநானூறு. கடவுளைத் தேடிக் காடு மேடு என்று அலைகிறார்கள் மனிதர்கள். எத்தனையோ கோவில்களுக்குச் சென்று தேடுகிறார்கள். ஆனால் கடவுள் நம் இல்லத்திலேயே இருக்கிறார். ஆம்! நம் தாய்தான் கடவுள்.

பிள்ளைகள் நல்லவராக அல்லது கெட்டவராக ஆவதில் ஒரு தாயின் பங்கு மிகுதி. அறிவுள்ள மேதைகளை உருவாக்கிய உலகத் தாயர் பலர். வரலாற்றுத் தாயரைப் பற்றிப் படித்தால், கேட்டால் மட்டும் போதுமா! வரலாற்றுத் தாயாக வாழ்ந்து காட்ட வேண்டுமே! அதற்கு என்ன செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு உற்ற தோழியாக, நண்பனாக, வழிகாட்டியாக வாழ்ந்து காட்ட வேண்டும். குழந்தைகளின் குறைகளைப் பிறர் எதிரில் கூறாமல் இருக்க வேண்டும். வேறு குழந்தைகளோடு ஒப்புமைப்படுத்தாது இருக்க வேண்டும்.

பேராசையை ஊட்டாது இருக்க வேண்டும். உணவு வேளைகளில் ஒன்றாக அமர்ந்து உண்டு பாசத்தைக் காட்ட வேண்டும். சிக்கல்கள் தோன்றும் போது குழந்தைகளிடம் ஆலோசனை கேட்க வேண்டும். தியாகம், அன்பு வளர உதவ வேண்டும்.

திறமைகளைப் போற்ற வேண்டும். தாயாரும் நடக்க வேண்டும்; குழந்தைகளையும் நல்வழியில் நடக்கச் செய்ய வேண்டும். குழந்தைகளிடம் வேறுபாடு காட்டாது வளர்க்க வேண்டும்.

- தாயம்மாள் அறவாணன், முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்

Next Story