9 வயது ஆசிரியை


9 வயது ஆசிரியை
x
தினத்தந்தி 13 May 2018 2:18 PM IST (Updated: 13 May 2018 2:18 PM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையில் மகிழ்ச்சியாக விளையாடி பொழுதை போக்குபவர்களில் இருந்து கோமல் மாறுபட்டவர். விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக இவருடைய கைகளில் புத்தகங்கள் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

காலையில் எழுந்ததும் கை நிறைய புத்தகங்களுடன் அருகில் உள்ள கிராமங்களுக்கு புறப்பட்டு செல்கிறார். அந்த கிராமங்களில் உள்ள குழந்தைகளிடம் புத்தகங்களை கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். படக்கதைகள், சிறு கதைகள், பொது அறிவு தகவல்கள் கொண்ட புத்தகங்கள் என பல்சுவை களஞ்சியங்கள் அடங்கிய நடமாடும் நூலகமாக கோமல் செயல்பட்டு வருகிறார்.

கோமல், மகாராஷ்டிரா மாநிலம் சட்டரா மாவட்டத்திலுள்ள ஹெகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர். 9 வயதாகும் இவர் அங்குள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் படித்து வருகிறார். படிப்பில் ஆர்வம் காட்டாத சிறுவர், சிறுமியர்களை தேடி பிடித்து அவர்களுக்கு கதைகள் சொல்லி கல்வியின் மீது கவனம் பதிய வைக்கிறார். கோமலின் முயற்சிக்கு சக மாணவர்களும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். அனைவரும் இணைந்து தினமும் ஒரு ஊரை தேர்ந்தெடுத்து அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கி படிக்கவும், எழுதவும் வைத்து உற்சாகப்படுத்துகிறார்கள்.

‘‘ஏழ்மை நிறைந்த எங்கள் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு சரியாக புத்தகங்கள் கிடைப்பதில்லை. நோட்டு, புத்தகங்களுக்கு செலவிட அவர்களிடம் பணமும் இல்லை. அதனால் நிறைய குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் படிப்பறிவு பெற வேண்டும். என்பதற்காக அவர்கள் மத்தியில் புத்தகங்களை வாசித்து காண்பித்து அவர்களையும் வாசிக்க வைக்கிறோம். என் வயதை ஒத்த சிறுவர்-சிறுமியர் அனைவரும் மகிழ்ச்சியாக பள்ளிக்கூடம் சென்று படிக்கும் சூழல் உருவாக வேண்டும்’’ என்கிறார். கோமல் தொண்டு நிறுவனம் மூலம் குழந்தைகளுக்கு புதிய புத்தகங்களையும் வழங்குகிறார். பழைய புத்தகங்களை சேகரித்தும் ஏழை மாணவர்களுக்கு கொடுக்கவும் செய்கிறார்.

படிக்கும் பருவத்தில் ஆசிரியைபோல் சமூக சேவை செய்து வரும் கோமலுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. 

Next Story