பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் : இறைச்சிக் கோழி வளர்ப்பு


பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் : இறைச்சிக் கோழி வளர்ப்பு
x
தினத்தந்தி 13 May 2018 4:13 PM IST (Updated: 13 May 2018 4:20 PM IST)
t-max-icont-min-icon

பெருகி வரும் உணவகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இறைச்சிக் கோழிகளின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா, இறைச்சிக் கோழி உற்பத்தியில் முன்னேறி வருகிறது.

 உயர் ரக கோழிக் குஞ்சுகள், நோய் தடுப்பு மருந்துகள், தீவனம் போன்ற அனைத்தும் எளிதாக கிடைப்பதே இந்த முன்னேற்றத்துக்கான காரணமாகும். உலகளவில் முட்டை உற்பத்தியில் நமது நாடு 4-வது இடத்தையும், இறைச்சிக் கோழி உற்பத்தியில் 5-வது இடத்தையும் பிடித்திருக்கிறது.

இறைச்சி மற்றும் முட்டை தேவைக்காக திட்டமிட்டு கோழிக் குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. முட்டைக்கென வளர்க்கப்படும் இனங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு அதனிடமிருந்து பெறப்படும் முட்டைகள் அடுத்த தலைமுறை குஞ்சுகள் பெற பயன்படுகின்றன. வறுக்கவும், பொரிக்கவும் பயன்படும் இறைச்சிக் கோழிகள் விரைவில் வளரக்கூடிய இனங்களாகும். 21-வது வாரத்தில் இருந்து 72-வது வாரம் வரை உள்ள கோழிகள் முட்டையிடும் கோழிகளாகும். அதேபோல் இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆண், பெண் கோழிகள் 6 முதல் 8 வாரம் வரை வளர்க்கப்பட்டு இறைச்சிக்காக அனுப்பப்படுகின்றன.

கோழிகளில் முட்டையிடும் கோழி இனங்கள், இறைச்சிக்கோழி இனங்கள் என்று இரு வகை உள்ளது. முட்டையிடும் கோழி இனங்கள்: அசீல், பிரிஸில், கடக்னாத், திறந்த கழுத்து (நெக் டு நெக்). இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள்: எல்ஏ77, காரிபிரோ91, காரிபிரோ(பல நிறம் கலந்தது), காரிபிரோ நெக்டூ நெக், வார்னா போன்றவை.

எல்ஏ77 இன கோழிக் குஞ்சுகளின் எடை 6-வது வாரத்தில் 1,300 கிராமாகவும், 7-வது வாரத்தில் 1,600 கிராம் என்கிற அளவிலும் இருக்கும். இதன் வாழ்நாள் திறன் 99 நாட்கள். காரிபிரோ91 கோழி இனம் 6-வது வாரத்தில் 1650 கிராம் எடையும், 7-வது வாரத்தில் 2 ஆயிரத்து 100 கிராம் என்கிற எடையிலும் இருக்கும். இதன் வாழ்நாள் திறன் 98 நாட்கள்.

காரிபிரோ(பல நிறம் கலந்தது) 6-வது வாரத்தில் 1600 கிராம் எடையும், 7-வது வாரத்தில் 2 ஆயிரம் கிராம் எடை அளவிலும் வளரும். வாழ்நாள் 98 நாட்கள். காரிபிரோ நெக் டூ நெக் இன கோழி 6-வது வாரத்தில் ஆயிரத்து 650 கிராம் எடையும், 7-வது வாரத்தில் 2 ஆயிரம் கிராம் எடையையும் எட்டிவிடும். இதன் வாழ்நாள் திறன் 98 நாட்கள். வார்னா இன கோழி 6 மற்றும் 7-வது வாரத்தில் 1800 கிராம் எடையை எட்டும். வாழ்நாள் 97 நாட்கள்.

முட்டையிடும் கோழி இனமான அசீல், 20 வாரங்களில் 1220 கிராம் எடையை எட்டுவதுடன், 196 நாட்களில் அதன் பருவ வயதை அடையும். இது ஆண்டுக்கு 92 முட்டையிடும். முட்டையின் எடை 50 கிராம். பிரிஸில் 20 வாரங்களில் 1005 கிராமை எட்டும். 185 நாட்களில் பருவ வயதை அடைவதுடன், ஆண்டு முட்டை உற்பத்தி அளவு 110 என்கிற எண்ணிக்கையில் இருக்கும். கடக்னாத் 20 வாரங்களில் 920 கிராம் அளவுக்கு வளர்ச்சிெபறும். முட்டையிடும் பருவத்தை 180 நாட்களில் எட்டும். ஆண்டிற்கு 105 முட்டையிடும். திறந்த கழுத்து இன கோழி 20-வது வாரத்தில் 1005 கிராம் எடையை எட்டும். 201-வது நாளில் பருவ வயதை அடைந்து முட்டையிட தொடங்கும். ஆண்டுக்கு 99 முட்டையிடும்.

முட்டைக்கோழி வளர்ப்பை விட, இறைச்சி கோழி வளர்ப்பிற்கான முதலீடு குறைவு. அதன் வளர்ப்பு காலம் 6 முதல் 7 வாரங்கள்தான். மேலும் அதிகளவு கோழிகளை ஒரே கொட்டகை அல்லது அறையில் வளர்க்க முடியும். ஆட்டிறைச்சியை காட்டிலும் கோழி இறைச்சியின் விலை குறைவாக இருப்பதால், இதன் தேவை அதிகமாக உள்ளது.

மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே பண்ணை அமைத்தால், கோழிகளுக்கு அடிக்கடி இடையூறுகள் ஏற்பட்டு உற்பத்தி குறைந்துவிடும். ஏனெனில் அடிக்கடி ஆட்கள் நடமாட்டமிருந்தால் பிற பகுதிகளிலிருந்து பண்ணைக்குள் நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். பண்ணைக்கு தேவையான பொருட்களை எடுத்து வருவதற்கு ஏற்ற வகையில் வாகனங்கள் வந்து செல்ல வழிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பண்ணையின் அமைவிடத்தில் நீர், மின்சாரம் மற்றும் விற்பனை வசதிகள் இருக்க வேண்டும். வளர்க்க திட்டமிட்டுள்ள கோழிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பண்ணையை அமையுங்கள்.

சிறிய அளவில் கோழி வளர்ப்பில் ஈடுபட நினைப்பவர்கள் பண்ணையை தொடங்கும் முன்பாக, இறைச்சிக்கோழிகளை வாங்கி அவர்கள் வசிக்கும் பகுதியில் விற்பனை செய்ய தொடங்கினால் எத்தனை கோழிகள் விற்பனையா கின்றன, அந்த பகுதி மக்களிடையே தேவைகள் எந்த அளவில் இருக்கிறது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கு ஏற்றாற்போல் பண்ணையை அமைக்கலாம். பண்ணை அமையும் இடத்தில் கோழி குஞ்சு களுக்கு தேவையான வெப்பம் தடையின்றி கிடைக்கும் வண்ணம் மின்சார வசதி இருக்க வேண்டும்.

இறைச்சிக் கோழிகளுக்கு ஆழ்கூள முறையில், ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி முதல் 1.2 சதுர அடி இடம் தேவை. பண்ணையில் தொடர்ச்சியாக வாரந்தோறும் கோழிகளை விற்பனை செய்து கொண்டே இருக்கவேண்டும். பண்ணையில் இறந்துவிடும் கோழிகளை உடனுக்குடன் எரித்து விட வேண்டும். இதற்காக பண்ணையின் ஒருபகுதியில் எரிப்பு அறை ஒன்றை உருவாக்கவேண்டும்.

வளர்க்கும் முறை

பொதுவாக நாட்டுக்கோழி இனங்கள் திறந்த வெளியிலேயே வளர்க்கப்படுகின்றன. பகல் நேரங்களில் திறந்த வெளியிலும், இரவு நேரங்களில் கூடைகளிலும் அடைக்கப்படுகிறது. மரக்கிளைகளிலும் தங்கியிருக்கும். இவைகள் நெல், அரிசி குருணை, கம்பு, சோளம் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. இந்த முறையில் குறைந்த எண்ணிக்கையிலேயே கோழிகளை வளர்க்க முடியும். இவ்வாறு புறக்கடையில் கோழிகளை வளர்த்து வந்த காலம் மாறி, தற்போது தீவிர முறையில் இறைச்சிக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதில் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் வளர்க்க முடியும். இறைச்சிக்கோழிகள் ஆர்கானிக் பண்ணை முறை, ஆழ்கூள முறை, கூண்டு முறைகளில் வளர்க்கப்படுகின்றன.

ஆர்கானிக் பண்ணை முறையில் வளர்க்கப்படும் இறைச்சிக் கோழி களுக்கு ஆர்கானிக் தீவனம் அளிக்கப்படுகிறது. இந்த தீவனம் நோய் எதிர்ப்பு உயிரி, பூச்சிக்கொல்லி, ரத்தகழிச்சல் நோய் தீர்க்கும் மருந்து மற்றும் மற்ற வேதியியல் பொருட்கள் இல்லாத தன்மை கொண்டதாக இருக்கும். இந்த முறையில் வளர்க்கப்படும் இறைச்சி கோழியின் உற்பத்தி செலவு அதிகமாகவும், கோழியின் விற்பனை விலையும் அதிகமாகவும் இருக்கும். இந்த முறையில் பண்ணையில் குறைந்த அளவில் மட்டுமே கோழிகளை வளர்க்க முடியும். இதுபோன்ற ஆர்கானிக் பண்ணை வெளிநாடுகளில் பிரபலமாகி வருகின்றன.

இறைச்சிக் கோழிகளை ஆழ்கூள முறையிலும் வளர்க்க முடியும். இந்த முறையில் வளர்க்க அதன் கொட்டகை அமைப்பானது கிழக்கு மேற்கு திசையில் அமைத்திட வேண்டும். இதன் மூலம் மழைக்காலத்தில் சாரலிலும், கோடை காலத்தில் வெயிலிலும் நேரடியாக கோழிகளை தாக்குவதை தடுத்து, அதனால் உண்டாகும் அயர்ச்சியை தவிர்க்க முடியும். கொட்டகையின் அகலம் 30 அடிக்கு மிகாமல் இருந்தால் நல்லது. அகலம் அதிகமானால் காற்றோட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு, ஆழ்கூளத்தில் ஈரப்பதமும், அமோனியா வாயுவும் அதிகரிக்கும். சிமெண்டினால் நன்கு பூசப்பட்ட தரையாக இருந்தால், கோழிகளை விற்பனை செய்த பிறகு எளிதாக சுத்தம் செய்யலாம்.

ஆழ்கூள முறையில் இன்னொரு பிரிவு, ஒற்றைக் குழு வளர்ப்பு முறையாகும். இதில் சிறந்த சுகாதார முறைகளை கடைப்பிடித்து குழு முறையில் அதிக எண்ணிக்கையிலான கோழிகளை வருடம் முழுவதும் வளர்த்து அதிக வருமானத்தை பெற முடியும். ஒரு அறையில் ஒரே சமயத்தில் ஒரே வயதுடைய கோழிகளை மட்டுமே வளர்க்க வேண்டும்.

ஆழ்கூள வளர்ப்பு முறை அதிக பலனுள்ளது. சிமெண்ட் தரை கொண்ட கோழி கொட்டகையில் மரத்தூள், மர இழைப்பு சுருள், நெல், உமி, நிலக்கடலை தோல், கரும்பு சக்கை, துண்டிக்கப்பட்ட மக்காசோள தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கூளம் அமைத்து கோழிகளை வளர்க்கலாம். அந்த பொருள், நன்றாக ஈரத்தை உறிஞ்சக் கூடியதாக இருக்க வேண்டும். மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்க கூடியதாக இருக்க வேண்டும். மேலும் அதனை கிளறிவிடும்போது அது காற்றில் எளிதில் உலரக்கூடியதாக இருக்க வேண்டும். கோழிகளை காயப்படுத்த கூடிய இரும்பு, ஆணி போன்ற கடினமான பொருட்கள் அதில் கலந்துவிடக்கூடாது. மேலும் நச்சுத்தன்மை இல்லாமலும் இருக்க வேண்டும்.

கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும். இதில் ஈரப்பதம் 25 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒரு கையளவு கூளத்தை எடுத்து பிசைந்து பார்த்தால், அவை உருண்டை ஆகிவிட்டால் ஈரப்பதம் அதிகம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். ஈரம் அதிகமானால் 100 சதுர அடிக்கு 8 முதல் 10 கிலோ சுண்ணாம்பு தூள் தூவி விட்டு கிளறிவிடுவது நல்லது. முதல் மூன்று வாரம் வரையில் ஆழ்கூளப் பொருளை 5 செ.மீ. உயரத்திற்கும், மூன்று வாரத்திற்கு பிறகு 10 செ.மீ. உயரத்திற்கும் கொட்டகையில் நிரப்ப வேண்டும்.


(அடுத்த வாரம்: கோழிக் குஞ்சுகள் பராமரிப்பும், தீவனம் தயாரித்தலும்)

தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர். 

Next Story