விலை உயர்வால் செங்கலுக்கு மாற்றாக மானாமதுரையில் தயாரிக்கப்படும் பிளைஆஷ் கற்கள்
செங்கல் விலை உயர்வால், அதற்கு மாற்றாகவும், விலையை சமாளிக்கும் வகையிலும் மானாமதுரையில் தற்போது பிளைஆஷ் கற்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மானாமதுரை,
மண்பானை தயாரிப்பதற்கு பெயர் பெற்ற நகரமாக மானாமதுரை திகழ்ந்து வருகிறது. இதுதவிர தற்போது கட்டுமான பணிகளுக்கும் முக்கியத்துவமாக இந்நகரம் திகழ்கிறது. இங்குள்ள செங்கல் சேம்பரில் செங்கலுக்கு மாற்றாக பிளைஆஷ் கற்கள் தயாரிப்பு தற்போது அதிகரித்துள்ளது. தற்போது கட்டுமான தொழிலில் செங்கல் விலை அதிகரித்து வருவதால் மக்கள் செங்கலுக்கு பதிலாக பிளைஆஷ் கற்களுக்கு மாறி வருகின்றனர். மானாமதுரையில் 30–க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தற்போது மணல் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் செங்கல் உற்பத்திக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் அதற்கு மாற்றாக உற்பத்தி செலவு குறைந்த பிளைஆஷ் கற்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த கற்கள் தயாரிப்பின் போது நிலக்கரி சாம்பல் மற்றும் கிரசர் பொடி போன்ற கழிவுகள் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும், இந்த கற்களால் கட்டப்படும் கட்டிடங்கள் கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்புடனும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறுகிறது.
செங்கலுடன் இந்த கல்லை ஒப்பிடும்போது அதன் விலை மற்றும் எடையும் குறைவு. இந்த கல்லை கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் போது அதற்கேற்ப சிமெண்டு தேவையும் மிக குறைவாக உள்ளது என்று கட்டிட வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் கற்களை இணைக்க மட்டுமே சிமெண்டு கலவை தேவை எனவும், மேல்பூச்சு தேவை இல்லை என்பதும் இதன் தனிச்சிறப்பாக உள்ளது. செங்கலைவிட பல்வேறு நல்ல அம்சங்கள் உள்ளதால் இந்த பிளைஆஷ் கற்களை கட்டுமான நிறுவனத்தினர் மற்றும் வீடு கட்டும் பொதுமக்கள் அதிக அளவு வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து பிளைஆஷ் கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி போஸ் என்பவர் கூறும்போது, கட்டுமான பணிகளுக்கு பிளைஆஷ் கல்லை பயன்படுத்தும்போது அதன் செலவு குறைவாக இருக்கும். இதில் கிரசர் பொடி, நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் மற்றும் சிமெண்டு ஆகிய மூலப்பொருட்கள் சேர்ப்பதால் பிளைஆஷ் கற்களை சுலபமாக கட்டிட பணிக்கு பயன்படுத்தலாம். செங்கல் உற்பத்திக்கு விறகு அதிக அளவில் தேவைப்படுவது போல் இந்த கற்கள் தயாரிப்பதற்கு விறகு தேவை இல்லை. இந்த கற்களை வெயிலில் உலர வைப்பதால் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. தற்போது இந்த கல்லுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.