கோவில்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி உரிமையாளர் வந்ததால் மர்மநபர் தப்பி ஓட்டம்
கோவில்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர், வீட்டின் உரிமையாளர் வந்ததால் தப்பி ஓடி விட்டார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர், வீட்டின் உரிமையாளர் வந்ததால் தப்பி ஓடி விட்டார்.
குடிநீர் வினியோகம்
கோவில்பட்டி ஏ.கே.எஸ். ரோட்டில் வசித்து வருபவர் மாரியப்பன் (வயது 44). இவர் சொந்தமாக லாரி வைத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் கதிரவன் நகரில் உள்ளது. நேற்று காலையில் மாரியப்பன் மந்திதோப்பு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மாரியப்பன், வீட்டின் முன்பக்க கதவை பார்த்தார். கதவு பூட்டி இருந்தது. பின்பக்க கதவை பார்ப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றார்.
அப்போது வீட்டின் பின்புறத்தில் இருந்து ஒரு வாலிபர் வந்தார். அவர் கையில் ஒரு டி.வி.டி. பிளேயர் இருந்தது. அந்த வாலிபர் மாரியப்பனை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே மாரியப்பன் அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். பின்னர் ஒரு கல்லை எடுத்து அந்த வாலிபர் மீது எறிந்தார். இதில் அந்த வாலிபரின் தலையில் காயம் ஏற்பட்டது. இருந்த போதும் அவர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார்.
மூட்டை கட்டப்பட்ட பொருட்கள்
இதையடுத்து மாரியப்பன் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தார். அங்கு அந்த வாலிபர் ஒரு இரும்பு கம்பியை கொண்டு கதவை உடைத்து இருப்பது தெரிந்தது. மேலும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். முதல்கட்ட விசாரணையில் வீட்டில் நகை, பணம் ஏதும் இல்லாததால் மர்மநபர் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயன்றதும், அப்போது மாரியப்பன் வந்ததால் அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காயம் அடைந்த மர்மநபர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்படலாம் என்பதால், தனியார் ஆஸ்பத்திரிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story