தூத்துக்குடி கடற்கரையில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குடில்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் அமைக்கப்பட்டு இருந்த உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குடில்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் அமைக்கப்பட்டு இருந்த உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குடில்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
உணவு பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், ‘உணவு பாதுகாப்பே உயிர் பாதுகாப்பு’ என்ற தலைப்பில், பொதுமக்களிடம் கோடைகால உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த குடில்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஒரு மனிதன் உடல் ஆரோக்கியம் பெறவேண்டும் என்றால், பாதுகாப்பான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பாதுகாக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் போது, நோய்களின் தாக்கம் குறையும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப, பொதுமக்கள் நோய் இல்லாமல் வாழ வேண்டும்.
கோடைகாலங்களில் உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முத்துநகர் கடற்கரை பகுதி மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய இடங்களில், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக, குடில்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புகார்கள்
இந்த விழிப்புணர்வு பணிகள் இந்த மாதம் இறுதி வரை நடைபெறும். இதில், கலப்படம் செய்யப்பட்ட உணவுகளை எவ்வாறு நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாதிரி உணவுகளை வைத்து பரிசோதனை செய்து, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பற்ற உணவுகள் குறித்த புகார்களை, 94440-42322 என்ற எண்ணிலும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம். மேலும், உணவகங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜகோபால், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story