காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் இல.கணேசன் எம்.பி. பேட்டி


காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் இல.கணேசன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 14 May 2018 4:15 AM IST (Updated: 14 May 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று இல.கணேசன் எம்.பி. கூறினார்.

கோவை,

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. நேற்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு அதை உறுதி செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்று முதல்–அமைச்சர் கூறி இருக்கும் கருத்தை வழிமொழிகிறேன்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும். வரைவு செயல் திட்டம் நாளை (அதாவது இன்று) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயமான முறையில் தீர்வு கிடைக்கும்.

எஸ்.வி.சேகரை பொறுத்தவரை அவர் பாரதீய ஜனதாவில் உறுப்பினராக இருந்தாலும் தீவிரமாக பணியாற்றியது இல்லை. அவர் தான் பதிவிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார். வேறு ஒருவர் பதிவை படிக்காமல் பதிவு செய்து விட்டேன் என்று தெரிவித்து உள்ளார். அவருக்கு இந்த பதிவை அனுப்பியது யார்? என்பதை கண்டுபிடிக்காமல் உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆடிட்டர் குருமூர்த்தி பாரதீய ஜனதா நலன் விரும்பி. ரஜினிக்கும் நலம் விரும்பியாக உள்ளார். பாரதீய ஜனதாவும், ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று குருமூர்த்தி கூறிய கருத்து குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தேனி மாவட்டம் போடியில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் துரதிருஷ்டவசமானது. இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அத்தனை பேர் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் ‘பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறதே? என்று நிருபர்கள் கேட்டபோது, ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். இதற்கு மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.


Next Story