சாத்தான்குளம் அருகே சுவர் இடிந்து விழுந்து சிறுவன் சாவு நண்பர்களுடன் விளையாடியபோது பரிதாபம்
சாத்தான்குளம் அருகே நண்பர்களுடன் விளையாடியபோது சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் அருகே நண்பர்களுடன் விளையாடியபோது சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
9 வயது சிறுவன்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேய்க்குளம் அருகே உள்ள சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஜான்சன் (வயது 9). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து முடித்து இருந்தான். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால், தினமும் அந்த பகுதியில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து ஜான்சன் விளையாடி வந்தான்.
அதே பகுதியில் வெளிநாட்டில் வசித்து வரும் ரவிகுமார் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. அந்த சுவரின் இருபுறமும் சிமெண்டு பூசப்படாமல் இருந்தது.
சுவர் இடிந்து விழுந்தது
நேற்று காலையில் ஜான்சன், புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் அருகில் நின்று நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சுவர் இடிந்து ஜான்சன் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ஜான்சனை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சிறுவன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் விளையாடிய சிறுவன், சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story