ஊத்துக்கோட்டை அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
ஊத்துக்கோட்டை அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்மம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சீதஞ்சேரியில் 1,000–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சுற்றிலும் 10 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் சீதஞ்சேரிக்கு வந்து அங்கிருந்து புறப்படும் பஸ்களில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, சென்னை உள்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். சீதஞ்சேரியில் அரசு மேல்நிலைப்பள்ளி, வனத்துறை அலுவலகம், இதர அரசு அலுவலகங்கள் உள்ளன. இப்படி பிரதானமாக விளங்கும் சீதஞ்சேரியில் கழிவு நீர் கால்வாய்கள் இல்லை.
வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் மாத கணக்கில் தேங்கி நிற்கிறது.
இது குறித்து சீதஞ்சேரியை சேர்ந்த பொது மக்கள் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்னர். தேங்கி நிற்கும் கழிவு நீரை கடந்துதான் பாதசாரிகள் செல்ல வேண்டி உள்ளது. வாகனங்கள் செல்லும் போது கழிவுநீர் சிதறி இந்த வழியாக செல்லக்கூடியவர்களின் ஆடைகளில் படிகிறது.
கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. 2 வாரங்களுக்கு முன்னர் அந்த பகுதியை சேர்ந்த 15 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீதஞ்சேரியில் கழிவு நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.