புளியங்குடி நகரசபை பகுதியில் ரூ.52 லட்சத்தில் குடிநீர் திட்டம் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்


புளியங்குடி நகரசபை பகுதியில் ரூ.52 லட்சத்தில் குடிநீர் திட்டம் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 May 2018 9:15 PM GMT (Updated: 13 May 2018 8:03 PM GMT)

புளியங்குடி நகரசபை பகுதியில் ரூ.52 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

புளியங்குடி நகரசபை பகுதியில் ரூ.52 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டம் புளியங்குடி நகரசபைக்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் ரூ.52 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மனோகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குடிநீர் திட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு, பொதுமக்களுக்கு தேவையான எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புளியங்குடி நகரசபை பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.52 லட்சம் செலவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில், சடையநேரி கண்மாயில் 10 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அதிலிருந்து 10 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கப்பெறும்.

வறட்சி நிவாரணத்திட்டம்

கண்மாயின் உட்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு கிணற்றில் தண்ணீரை நிரப்பி அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் குழாய் அமைத்து சிந்தாமணி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள ஒரு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தண்ணீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டம் கோடைகால வறட்சி நிவாரணத்திட்டம் மற்றும் பொது நிதியின் கீழ் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து புளியங்குடி நகரசபை அலுவலகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நகர்மன்ற கூட அரங்கத்தை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில், புளியங்குடி நகரசபை ஆணையாளர் பவுண்ராஜ், கடையநல்லூர் தாசில்தார் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story