மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஓட்டல் அதிபர் உள்பட 3 பேர் சாவு


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஓட்டல் அதிபர் உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 13 May 2018 10:15 PM GMT (Updated: 13 May 2018 8:31 PM GMT)

வில்லியனூர் அருகே நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டல் அதிபர் உள்பட 3 பேர் பரிதாபமாகச் செத்தனர்.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே தென்னல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). வில்லியனூரில் இருந்து கண்டமங்கலம் செல்லும் ரோட்டில் இவர் பஞ்சாபி தபாபா என்ற பெயரில் ஓட்டல் வைத்துள்ளார். இவருடைய ஓட்டலில் கொல்கத்தாவை சேர்ந்த ரம்ஜான் அலி (24). அசாருதீன்கான் (24) ஆகியோர் சமையல் மாஸ்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் இவருடைய ஓட்டலுக்கு உணவு சாப்பிட நள்ளிரவு வரை ஆட்கள் வந்ததால், அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கிவிட்டு நேற்று அதிகாலை 3 மணி அளவில் வியாபாரத்தை முடித்தனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து மறுநாள் விற்பனைக்கு உணவு பொருட்கள் தயாரிப்பதற்காக காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் ஓட்டல் அதிபர் மணிகண்டன், சமையல் மாஸ்டர்கள் ரம்ஜான் அலி, அசாருதீன்கான் ஆகியோர் வில்லியனூர் நோக்கி சென்றனர்.

வில்லியனூர் அருகே வடமங்கலத்தில் அவர்கள் ஒரு வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்பியபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சமையல் மாஸ்டர் ரம்ஜான் அலி பரிதாபமாகச் செத்தார். மணிகண்டன், அசாருதீன்கான் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயத்துடன் உயிருக்கு போராடிய மணிகண்டன், அசாருதீன்கான் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அசாருதீன்கான் பரிதாபமாகச் செத்தார். மணிகண்டன் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சிறிது நேரத்தில் மணிகண்டன் இறந்தார்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் ராஜாசங்கர் வல்லட், சப்–இன்ஸ்பெக்டர்கள் கலியபெருமாள், பாஸ்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்தில் பலியான 3 பேருக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story