மாவட்ட செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல்:மாநிலத்தில் 38 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை + "||" + Karnataka assembly election: 38 centers in the state Tomorrow's vote count

கர்நாடக சட்டசபை தேர்தல்:மாநிலத்தில் 38 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை

கர்நாடக சட்டசபை தேர்தல்:மாநிலத்தில் 38 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நாளை(செவ்வாய்க் கிழமை) 38 மையங்களில் நடக்கிறது.
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நாளை(செவ்வாய்க் கிழமை) 38 மையங்களில் நடக்கிறது.

ஓட்டு எண்ணிக்கை

கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது கடந்த 2013-ம் ஆண்டு பதிவான வாக்குகளை விட சிறிது அதிகம் ஆகும். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில், 283 அரங்குகளில் இந்த ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இரும்பு தடுப்புகள்

அதாவது பெங்களூரு மத்திய பகுதிக்கு உட்பட்ட தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை பசவனகுடியில் உள்ள பி.வி.எஸ். கல்லூரியிலும், பெங்களூரு வடக்கு பகுதிக்கு உட்பட்ட தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை வசந்த்நகரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியிலும், பெங்களூரு தெற்கு பகுதியை சேர்ந்த தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை ஜெயநகர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரி யிலும், பெங்களூரு நகர மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை சேஷாத்திரி ரோட்டில் உள்ள மகாராணி கல்லூரியிலும், பெங்களூரு புறநகர் மாவட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பசவேஸ்வரா சர்க்கிளில் உள்ள அரசு ராம்நாராயண் செல்லாராம் வணிக கல்லூரியிலும் நடக்கிறது.

ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்துள்ளனர். அதற்கு தேவையான மேஜைகள் மற்றும் நாற்காலிகள், இரும்பு தடுப்புகள் அந்தந்த மையங்களில் போடப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் ஓட்டு எண்ணிக்கையை நேரில் பார்வையிடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்குள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஏஜெண்டுகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மற்றவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.