கர்நாடக சட்டசபை தேர்தல்: ஹெப்பால், குஷ்டகியில் இன்று மறுவாக்குப்பதிவு
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஹெப்பால், குஷ்டகி தொகுதியில் இன்று(திங்கட்கிழமை) மறுவாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஹெப்பால், குஷ்டகி தொகுதியில் இன்று(திங்கட்கிழமை) மறுவாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.
தொழில்நுட்ப கோளாறு
கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மாநிலம் முழுவதும் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சிறிய அளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அவை சரிசெய்யப்பட்டு ஓட்டுப்பதிவு தடங்கல் இன்றி நடைபெற்றது.
ஆனால் பெங்களூரு ஹெப்பால் தொகுதிக்கு உட்பட்ட லொட்டேகொல்லஹள்ளி காந்தி வித்யாலயா தொடக்கப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந் தது. அந்த வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. வாக்காளர்கள் எந்த பொத்தானை அழுத்தினாலும் ஒரே வேட்பாளருக்கு ஓட்டு விழுந்ததால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக ஓட்டுப்பதிவு பணியை நிறுத்தினர்.
இன்று தேர்தல்
அதைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் மட்டும் ஓட்டுப்பதிவு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த லொட்டேகொல்லஹள்ளி வாக்குச்சாவடியில் 14-ந் தேதி (அதாவது இன்று) வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
இந்த மறுவாக்குப்பதிவு நடைபெறும் லொட்டேகொல்லஹள்ளி வாக்குச்சாவடியில் சுமார் 1,444 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 740 பேரும், பெண் வாக்காளர்கள் 704 பேரும் அடங்குவர். அவர்கள் இன்று தங்களின் வாக்கை பதிவு செய்கிறார்கள். ஆட்டோக்களில் ஒலி பெருக்கிகள் மூலம் மறுவாக்குப்பதிவு குறித்து அந்த பகுதியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குஷ்டகியிலும் மறுதேர்தல்
அதேபோல் திடீர் நடவடிக்கையாக கொப்பல் மாவட்டம் குஷ்டகி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுதேர்தல் நடத்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. அங்கு வாக்காளர்களின் எண்ணிக்கையை விட கூடுதல் ஓட்டுகள் பதிவானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஹெப்பால், குஷ்டகியில் மறு ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
Related Tags :
Next Story