மாவட்ட செய்திகள்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ‘ஒயின்’ தயாரிக்க பயன்படுத்தப்படும் புதிய ரக திராட்சை சாகுபடி + "||" + New wine grape cultivation used for making wine

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ‘ஒயின்’ தயாரிக்க பயன்படுத்தப்படும் புதிய ரக திராட்சை சாகுபடி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ‘ஒயின்’ தயாரிக்க பயன்படுத்தப்படும் புதிய ரக திராட்சை சாகுபடி
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், ஒயின் தயாரிக்க பயன்படுத்தபடும் புதிய ரக திராட்சையை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு, திராட்சை ஆராய்ச்சி நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ஆனைமலையன்பட்டியில் திராட்சை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. கோவை வேளாண்பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த நிலையத்தில், திராட்சை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய ரகங்களை அறிமுகம் செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி திராட்சை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஒயின்’ தொழிற்சாலை உத்தமபாளையம் அடுத்துள்ள சின்னஓவுலாபுரத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் ‘ஒயின்’ தயாரிக்க தேவையான திராட்சை ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்யவில்லை.

மேலும் இங்கு சாகுபடி செய்யப்படும் திராட்சையில் ‘ஒயின்’ தயாரிக்க தேவைப்படும் இனிப்பு தன்மை இல்லை. இந்த நிலையில் திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் ஏற்றுமதி தரம் வாய்ந்த ‘ஒயின்’ தயாரிக்கும் ரகம் போன்ற வகைகளை சோதனை முறையில் சாகுபடி செய்யப்பட்டது. இதில் ‘ஒயின்’ தயாரிக்க தேவையான ரகங்கள் நல்ல முறையில் மகசூல் தந்துள்ளது.

சோதனை சாகுபடி நன்றாக இருந்ததால், விவசாயிகளிடம் ‘ஒயின்’ தயாரிக்க தேவையான ரகங்களை சாகுபடி செய்ய திராட்சை ஆராய்ச்சி நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. கூட்டுறவு அடிப்படையில் விவசாயிகளை ஒருங்கிணைத்து பிரான்ஸ் நாட்டு உதவியுடன் ‘ஒயின்’ ரகங்களை சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திராட்சை ஆராய்ச்சிநிலைய விஞ்ஞானிகள் பார்த்திபன், சுப்பையா ஆகியோர்களிடம் கேட்ட போது, சர்வதேச அளவில் ஒயின் தயாரிப்பில் பிரான்ஸ் நாடு முன்னிலை வகிக்கிறது. எனவே ‘ஒயின்’ தயாரிக்க தேவையான தொழில்நுட்பங்களை பெறுவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதற்கட்டமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ‘ஒயின்’ ரகம் திராட் சையை சாகுபடி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ‘ஒயின்’ ரகங்களான செனின், மெர்லா, சிராஜ் உள்ளிட்ட ரகங்களை சோதனை முறையில் சாகுபடி செய்துள்ளோம். இந்த பகுதியில் உள்ள மண்வளம், மிதமான தட்பவெப்பம் காரணத்தால் ஒயின் ரகங்கள் நல்ல விளைச்சல் அடையும்.

கருப்பு திராட்சை போன்று நிர்ணயம் இல்லாத விலையாக இருக்காது. ‘ஒயின்’ திராட்சை குறைந்தது ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவில் வருமானம் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.