வீர சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க முடியுமா? மத்திய அரசுக்கு சிவசேனா சவால்


வீர சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க முடியுமா? மத்திய அரசுக்கு சிவசேனா சவால்
x
தினத்தந்தி 14 May 2018 4:00 AM IST (Updated: 14 May 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் ஆட்சி செய்பவர்களுக்கு இந்து ரத்தம் ஓடுமானால் வீர சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்குங்கள் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் சவால் விடுத்துள்ளார்.

மும்பை, 

மத்தியில் ஆட்சி செய்பவர்களுக்கு இந்து ரத்தம் ஓடுமானால் வீர சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்குங்கள் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் சவால் விடுத்துள்ளார்.

‘பாரத ரத்னா’

மறைந்த சுதந்திர போராட்ட வீரரும், இந்து மகா சபா தலைவருமான வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவுத், கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரி கையான ‘ சாம்னா’வில் இது குறித்து கூறியிருப்பதாவது:-

தற்போது மத்தியில் ஆட்சி செய்பவர்களுக்கு சுத்தமான இந்து ரத்தம் ஓடுமானால், வீர சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும். இல்லை எனில் வெறும் அரசியல் லாபத்துக்காகத்தான் இந்துத்வா கொள்கைகளை பேசி வருகிறோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஜின்னா படம்

பாகிஸ்தான் நாட்டின் தந்தையான முகம்மது அலி ஜின்னாவின் உருவப்படத்தை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் அகற்றியதற்கு பதிலடியாக சிலர் வீர சாவர்க்கரின் உருவப்படத்தையும் அகற்றுமாறு கோரிக்கை விடுப்பது வருத்தமளிக்கிறது. ஜின்னா உருவப்பட விவகாரத்தை கொண்டு சமூகத்தை பிளவுபடுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில்தான் போலி மதச்சார்பின்மை அதிகளவில் காணப்பட்டது. தற்போது மீண்டும் இந்த போலி மதச்சார்பின்மை ஏற்படாது என நம்புகிறேன்.

வீர சாவர்க்கரும் ஜின்னா போல பாரிஸ்டர் பட்டம் பெற்றவர் தான். ஜின்னா தனது படிப்பை பிரிவினைக்கு பயன்படுத்தினார். வீர சாவர்க்கரோ தனது பட்டத்தை நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகம் செய்தார். சராசரியான கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கூட பத்ம விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீர சாவர்க்கருக்கு குறைந்தபட்சம் ‘பத்ம விபூ‌ஷண்’ விருதாவது வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

Next Story