மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பரிதாபம்: கோட்டைகுளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி + "||" + The college student was killed as a drowning pond at dindugal

திண்டுக்கல்லில் பரிதாபம்: கோட்டைகுளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

திண்டுக்கல்லில் பரிதாபம்: கோட்டைகுளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
திண்டுக்கல் கோட்டைகுளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
திண்டுக்கல்,

திண்டுக்கல் சோலைஹால் தெருவை சேர்ந்தவர் ஜான் பாக்கியராஜ். அவருடைய மகன் ரித்திக் சகாயம் (வயது19). இவர், திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான வின்னரசு (19), அஸ்வின் (19) ஆகியோருடன் திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு சென்றார்.

பின்னர் மலைக்கோட்டையை சுற்றி பார்த்துவிட்டு, அடிவாரத்தில் உள்ள குமரன் பூங்காவுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து அங்குள்ள கோட்டைகுளத்தை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். கடந்த சில தினங்களாக திண்டுக்கல்லில் பலத்த மழை பெய்ததால், குளத்தில் தண்ணீர் அதிகமாக தேங்கி இருந்தது. இதைப்பார்த்தவுடன் 3 பேரும் இறங்கி குளித்தனர்.

சிறிதுநேரத்தில் அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தபடி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் குதித்து வின்னரசு, அஸ்வின் ஆகியோரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் ரித்திக் சகாயத்தை காப்பாற்ற முடியவில்லை. அவர், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். பின்னர் அவருடைய உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.