மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை: சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதம்; வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது + "||" + Heavy rain in Tirupur district

திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை: சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதம்; வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை: சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதம்; வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மேலும் பலத்த சூறாவளி காற்று வீசியதால் வாழை மரங்கள் சாய்ந்தன. வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. கூரைகள் காற்றில் பறந்தன.
பல்லடம்,

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் வாட்டி வதைக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் கொண்டிருந்த வேளையில், அக்னி நட்சத்திரம் மழையுடன் தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. மேலும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் வெயிலும், மாலையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழையும் பெய்கிறது. இந்த மழையால் குளம் மற்றும் குட்டைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தேவையான புற்கள் காட்டுப்பகுதியில் பசுமையுடன் காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கு தீவின பிரச்சினை குறைந்துள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. திருப்பூர் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. கொங்குநகர், 60 அடி ரோடு, குமார் நகர் பகுதிகளில் ரோட்டோரம் நின்ற பெரிய மரங்கள் வேரோடு சரிந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. மாநகராட்சி பணியாளர்கள் வந்து மரங்களை வெட்டி அகற்றினார்கள். பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதுபோல் காற்று சுழன்றடித்ததால் விளம்பர பதாகைகள் சரிந்தன. சின்னாண்டிப்பாளையத்தில் ஒரு வீட்டின் மீது மின்கம்பம் உடைந்து விழுந்தது. இதில் அந்த வீட்டின் ஓட்டு மேற்கூரை சேதம் அடைந்தன. அதுபோல் மற்றொரு வீட்டில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ஆட்டு கொட்டகை மொத்தமாக சரிந்து தரைமட்டமாகியது. இதில் ஆடுகள் தப்பின.

பல்லடம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையின் போது சூறாவளி காற்று கோரத்தாண்டவம் ஆடியது. சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிக வேகத்துடன் காற்று வீசியதாலும், மழை கொட்டித்தீர்த்ததாலும் சாலையில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. விளம்பர பதாகைகள் சாலையின் நடுவே விழுந்து கிடந்தன. மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்ததால் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் தடைபட்டது. வீடுகள், விசைத்தறி கூடங்கள் மீதும் மரங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தன.

பல்லடம் அருகே உள்ள பருவாய் மேட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் தோட்டத்தில் நேந்திரன் வாழை சாகுபடி செய்து இருந்தார். இந்த வாழைகள் தற்போது குலை தள்ளிய நிலையில் இன்னும் 2 மாதத்தில் அறுவடை செய்யமுடியும். ஆனால் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், அனைத்து வாழைகளும் சாய்ந்து சேதம் அடைந்தது. அதே போல் ஆறாக்குளம் புதுச்சாலை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் தோட்டத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. சபாபதி மற்றும் கந்தசாமி ஆகியோரின் பள்ளக்காடு தோட்டத்தில் உள்ள மாட்டுக்கொட்டகை காற்றில் பறந்தது.

அந்த பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடத்தின் மேற்கூரை காற்றில் பறந்தது. சாமி கவுண்டம்பாளையம் ஊருணி தோட்டத்தை சேர்ந்த தண்டபாணி என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் மீது மரம்வேரோடு சாய்ந்தது. சாமிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மாடியில் உள்ள கூரைபறந்து பக்கத்தில் இருந்த செல்வராஜ் மற்றும் ராமசாமி ஆகியோரின் வீடுகளின் மீது விழுந்தது. இதனால் அந்த 2 வீடுகளின் ஓடுகள் சேதம் அடைந்தன. லட்சுமி மில் பகுதியில் ஒரு பேக்கரியின் மேற்கூரை பறந்தது. அந்த பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் இல்லை.

பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு பல்லடம் பகுதியில் மட்டும் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டன. இதனால் மின்சாரம் தடைபட்டது. சில பகுதிகளில் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் விடிய விடிய தவித்தனர். இதையடுத்து வேரோடு சாய்ந்த மரங்களை அப்புறப்படுதும் பணி நடந்து வருகிறது. ஒரே நாள் இரவு சூறாவளியின் கோரத்தாண்டவத்திற்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மங்கலம் ரோடு பகுதியில் ரோட்டோரம் இருந்த மரங்கள் சரிந்ததால் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டன. பின்னர் மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. சின்னாண்டிப்பாளையத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் இருந்த வாழை மரங்கள் பலத்த காற்றுக்கு அடியோடு சாய்ந்தன. அதே போல் இச்சிப்பட்டி, குப்பாண்டந்தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சென்னியப்பன், ரமேஷ், மகேந்திரன், குமாரசாமி, முருகசாமி மற்றும் சின்னயன் கோவில் பகுதியை சேர்ந்த துரைசாமி ஆகியோர் வாழை சாகுபடி செய்து இருந்தனர். இந்த வாழைகள் குலை தள்ளிய நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்ய முடியும். ஆனால் பலத்த காற்றுக்கு அனைத்து வாழைகளும் சாய்ந்து சேதம் அடைந்தன. மங்கலம் பகுதியில் மட்டும் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சாய்ந்த வாழைகளை இச்சிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சாமிநாதன் பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவுப்படி திருப்பூரில் 44 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 29 மில்லி மீட்டரும், காங்கேயத்தில் 6 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 32 மில்லி மீட்டரும், மூலனூரில் 2 மில்லி மீட்டரும், உடுமலையில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் ஏற்பட்ட சேதங்களை மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மங்கலம், இடுவாய், சீராணம்பாளையம் பகுதியில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பலத்த காற்றுக்கு வீடுகள், விசைத்தறி கூடங்களின் மேற்கூரைகள் பறந்து சேதமடைந்தன. வாழை மரங்கள் சாய்ந்தன. மரங்கள் வேரோடு சரிந்தன.

ஆய்வு குறித்து தெற்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, இடுவாயில் 15, மங்கலத்தில் 5, சின்னாண்டிப்பாளையத்தில் 9 என மொத்தம் 29 வீடுகளின் ஓட்டு மேற்கூரை காற்றில் பறந்து சேதமடைந்துள்ளன. அதுபோல் 10 விசைத்தறி கூடங்களில் ஓட்டு மேற்கூரை, தகர ஷீட்டுகள் பறந்து விட்டன. மங்கலத்தில் 1,000 வாழைகளும், சின்னாண்டிப்பாளையத்தில் 500 வாழைகளும் சேதமாகியுள்ளன. இடுவாயில் 1½ ஏக்கர் பரப்பளவில் நின்ற பப்பாளி மரங்கள் சரிந்து சேதமாகியுள்ளது. இடுவாயில் ஒரு வீட்டின் தகர ஷீட் பறந்து சென்று காட்டுப்பகுதியில் நின்ற மயில் மேல் விழுந்துள்ளது. இதில் அந்த மயில் பலியானது. அதுபோல் சீராணம்பாளையத்தில் தகர ஷீட் பறந்து ஒரு பசு மாட்டின் கழுத்து பகுதியில் விழுந்து வெட்டியுள்ளது. காயமடைந்த மாட்டுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாரப்பாளையம், இடுவாய், சீராணம்பாளையம் பகுதியில் 60 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக மழை அதிகபட்சமாக சிதம்பரத்தில் 35 மில்லி மீட்டர் பதிவு
மாவட்டம் முழுவதும் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சிதம்பரத்தில் 35 மில்லி மீட்டர் மழை பதிவானது.
2. வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி மாவட்டத்தில் பரவலாக மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
3. மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 66 மில்லி மீட்டர் பதிவு
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 66 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
4. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 50.8 மில்லி மீட்டர் பதிவானது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 50.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.
5. கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.