திருப்பூரில் நொய்யல் ஆற்றில் நுரையோடு பாய்ந்த வெள்ளம்: பொதுமக்கள் அதிர்ச்சி


திருப்பூரில் நொய்யல் ஆற்றில் நுரையோடு பாய்ந்த வெள்ளம்: பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 14 May 2018 12:00 AM GMT (Updated: 13 May 2018 11:32 PM GMT)

திருப்பூரில் நொய்யல் ஆற்றில் நேற்று நுரையோடு வெள்ளம் பாய்ந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர், 

திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நொய்யல் ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை பெத்திசெட்டிபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரையோடு வெள்ளம் பாய்ந்தது. கடந்த வாரமும் இதுபோல் பெத்திசெட்டிபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் நுரையோடு மழைநீர் சென்றது. அதுபோல் நேற்றும் சென்றதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நொய்யல் ஆற்றின் கரையோரப்பகுதி நுரையாக காணப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் நுரையை கையில் எடுத்து விளையாடினார்கள். இரவு நேரத்தில் மழை பெய்து நொய்யல் ஆற்றில் மழைநீர் பெருக்கெடுக்கும்போதெல்லாம் நுரை ஏற்படுவது பொதுமக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெத்திசெட்டிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, இரவில் மழை பெய்து நொய்யல் ஆற்றில் அதிகமாக தண்ணீர் பாயும்போது வெள்ளை நுரை அதிகமாக ஏற்படுகிறது. சாதாரணமாக கழிவுநீர் செல்லும்போது இதுபோன்ற நுரை ஏற்படுவது இல்லை. ரசாயன கழிவுகள் கலக்கும்போது தான் வெள்ளை நுரை ஏற்படுகிறது.

ரசாயன கழிவுகள் எங்கிருந்து நொய்யல் ஆற்றில் திறக்கப்படுகிறது என்பதை அதிகாரிகள் கண்டறிவது அவசியம். ஆனால் சோப்பு பயன்படுத்துவதால் நுரை பொங்குவதாக கூறுகிறார்கள். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முறையாக சோதனை நடத்தி நுரை ஏற்படுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் சாய, சலவைப்பட்டறைகள் மீதான கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றனர். ஏற்கனவே நேற்று முன்தினம் காசிப்பாளையத்தில் நொய்யல் ஆற்றில் நுரையோடு கழிவுநீர் சென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story