அவினாசியில் ஓட்டலின் முகப்பு மேற்கூரை விழுந்து இளம்பெண் பலி; 3 பேர் காயம்
அவினாசியில் ஓட்டலின் முகப்பு மேற்கூரை விழுந்து இளம்பெண் பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். மற்றொரு சம்பவத்தில் மூதாட்டியும் உயிரிழந்தார்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும், வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும். எனவே அன்றைய தினம் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க அருகில் உள்ள ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
திருப்பூரை சுற்றி உள்ள தொழிலாளர்கள் திருப்பூருக்கும், அவினாசியை சுற்றி உள்ள தொழிலாளர்கள் அவினாசி பகுதிக்கும் வந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். அன்றைய தினம் காலையில் பொருட்கள் வாங்க வரும் அவர்கள் பல்வேறு பொருட்களை வாங்கி விட்டு, பின்னர் மதிய உணவை அந்தந்த பகுதிகளில் உள்ள ஓட்டல் அல்லது சிறிய உணவகத்தில் சாப்பிட்டு விட்டு மாலையில் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு திரும்பி செல்வார்கள்.
அதுபோல் அவினாசி அருகே நியூ திருப்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் சரஸ்வதி (வயது 22), சுனிதா (22) மற்றும் விழுப்புரம் மாவட்டம் டி.குன்னத்தூரை சேர்ந்த ரம்யா (19), உளுந்தூர் பேட்டையை சேர்ந்த பிரியா (22) ஆகிய 4 பேரும் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சரஸ்வதி உள்பட 4 பேரும் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து பஸ்சில் அவினாசி வந்தனர். பின்னர் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கடைகளில் வாங்கினார்கள்.
அதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அவினாசியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அதன்பின்னர் நிறுவனத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி அவினாசி பத்திரப்பதிவு அலுவலகம் எதிரில் உள்ள அமிர்தம் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அந்த ஓட்டலின் முகப்பு பகுதியில் மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த மேற்கூரையின் கீழ் சரஸ்வதி, சுனிதா, ரம்யா மற்றும் பிரியா ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று ஓட்டலின் மேற்கூரை மொத்தமாக விழுந்தது. இதில் சரஸ்வதி, சுனிதா, ரம்யா மற்றும் பிரியா ஆகிய 4 பேரும் சிக்கிக்கொண்டனர். இதனால் அவர்கள் வலி தாங்க முடியாமல் “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்“ என்று அலறினார்கள். உடனே அருகில் இருந்தவர்கள் மேற்கூரை ஷெட்டை தூக்கி அவர்களை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் ஷெட் கனமாக இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படைவீரர்களும், போலீசாரும் விரைந்து வந்து மேற்கூரையின் கீழ் சிக்கிய 4 பேரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் சரஸ்வதி பரிதாபமாக இறந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயம் அடைந்த சுனிதா, ரம்யா மற்றும் பிரியா ஆகியோரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் கிரேன் கொண்டு வரப்பட்டு கீழே விழுந்த ஷெட் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவினாசி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை கொட்டியது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகளின் கூரைகள் பறந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தது. மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்சார வயர்கள் துண்டிக்கப்பட்டன.
அதேபோல் ஓட்டலின் முன் பகுதியில் இருந்த மேற்கூரை கழன்று இருக்கலாம் என்றும், இதை கவனிக்காததால் நேற்று மதியம் திடீரென்று கீழே விழுந்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவத்தில் மூதாட்டி சாவு
மங்கலத்தை அடுத்த சீராணம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி தெய்வாத்தாள் (68). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீசிய சூறாவளி காற்றுக்கு வீட்டின் அருகில் இருந்த மரத்தின் கிளை முறிந்து இவர்களுடைய வீட்டின் கூரை மீது விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூரையான ஆஸ்பெட்டாஸ் உடைந்து தெய்வாத்தாள் மீது விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே தெய்வாத்தாள் இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் விரைந்து சென்று தெய்வாத்தாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே தெய்வாத்தாளின் குடும்பத்தினரை கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், மாநில குழு உறுப்பினர் காமராஜ் மற்றும் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
Related Tags :
Next Story