தட்சிண கன்னடா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு; கலெக்டர் தகவல்


தட்சிண கன்னடா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 May 2018 2:45 AM IST (Updated: 15 May 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு,

இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறு வதையொட்டி தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.

தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில், மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் விபுல் குமார் ஆகியோர் கூட்டாக நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் மங்களூரு அருகே விமான நிலைய சாலையில் உள்ள மகாத்மா காந்தி பி.யூ. கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணி நாளை(அதாவது இன்று) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தபால் ஓட்டு எண்ணப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இன்று(அதாவது நேற்று) நள்ளிரவு 12 மணி முதல் 16-ந் தேதி(அதாவது நாளை) நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

மேலும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பேரணி, ஊர்வலம், பட்டாசு வெடித்தல் போன்ற சம்பவங்களிலோ, கொண்டாட்டத்திலோ ஈடுபடக் கூடாது. மதுபான கடைகள் இன்று(அதாவது நேற்று) நள்ளிரவு 12 முதல் நாளை(அதாவது இன்று) நள்ளிரவு 12 வரை மூடப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கல்லூரியைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சசிகாந்த் செந்தில் கூறினார்.

இதேபோல், உடுப்பி மாவட்டத்தில் கார்கலா, குந்தாப்புரா, பைந்தூர், காபு, மற்றும் உடுப்பி ஆகிய 5 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், குந்திபெட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கும் இன்று(செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை உடுப்பி மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

Next Story