கருத்து கணிப்பு முடிவுகளில் தெளிவு இல்லை; கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்?


கருத்து கணிப்பு முடிவுகளில் தெளிவு இல்லை; கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்?
x
தினத்தந்தி 15 May 2018 4:15 AM IST (Updated: 15 May 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என அரசியல் கட்சி தலைவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பெங்களூரு,

கருத்து கணிப்புகளில் தெளிவு இல்லாததால், கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என அரசியல் கட்சி தலைவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தீர்வு கிடைத்துவிடும்.

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கர்நாடக சட்டசபை தேர்தல் வரலாற்றில் இது அதிகபட்ச ஓட்டு சதவீதம் ஆகும். பொதுவாக தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக மக்களிடையே ஒரு எதிர்ப்பு அலை உண்டாகும். இது ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுப்பதாக அமைந்துவிடும்.

பெரும்பாலான தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தான் தேர்தல் முடிவு அமையும். ஆனால் கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்களிடையே எதிர்ப்பு அலை இல்லை என்றே சொல்லப்படு கிறது. இது காங்கிரசுக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது.

ஆயினும் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு அலை இருப்பதாக சொல்கிறது. கருத்து கணிப்புகளை பார்த்தால், ஆளும் காங்கிரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை பெரிதாக இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்களிடையே ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை இருந்தால், காங்கிரசுக்கு இவ்வளவு இடங்கள் வரும் வாய்ப்பு இருக்காது என்றே அவர்கள் கூறுகிறார்கள்.

ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அலை இல்லாததால், வெற்றி கனியை பறிக்க பா.ஜனதா சற்று சிரமப்படுகிறது. ஏனென்றால் இதுவரை வெளியாகியுள்ள கருத்து கணிப்புகள் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே சாதகமாக இருக்கின்றன. ஆயினும் கருத்து கணிப்புகளில் தெளிவு இல்லை. இதனால் கட்சிகளின் தலைவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.அதனால் இந்த இரண்டில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதில் இன்னும் ஒரு தெளிவான கருத்து இல்லை. அதனால் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையில் தான் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவரும். மேலும் தலைவர்களின் குழப்பத்திற்கும் தீர்வு கிடைத்துவிடும்.

Next Story