காத்திருப்பு போராட்டத்துக்கு சென்ற சுமைப்பணி தொழிலாளர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்


காத்திருப்பு போராட்டத்துக்கு சென்ற சுமைப்பணி தொழிலாளர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
x
தினத்தந்தி 14 May 2018 10:45 PM GMT (Updated: 14 May 2018 10:09 PM GMT)

காத்திருப்பு போராட்டத்துக்கு சென்ற சுமைப்பணி தொழிலாளர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் காய்கறிகள் உள்ளிட்ட சரக்குகளை இறக்கி, ஏற்றும் பணியில் சுமைப்பணி தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் போக்குவரத்து நெரிசலால் திருச்சி காந்திமார்க்கெட் அங்கிருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இதனால் காந்தி மார்க்கெட்டில் பணிபுரிந்து வரும் சுமைப்பணி தொழிலாளர்கள் தங்களுக்கு கள்ளிக்குடி அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பல கிலோ மீட்டர் தூரம் சென்று பணியாற்றும் அவல நிலைக்கு தள்ளக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் வெங்காயமண்டி சுமைப்பணி தொழிற்சங்க கூட்டுக்குழு இயக்கத்தினர் நேற்று காலை திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி போராட்டத்தில் கலந்து கொள்ள சி.ஐ.டி.யூ. சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் பெரியகடைவீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். இது பற்றி முன்பே அறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

இதனால் அங்கேயே சாலையில் தொழிலாளர்கள் அமர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் சிவில் சப்ளை தாசில்தார் அகிலா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், “இலவச வீட்டு மனை வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும்” என்றார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story