நெல்லை அருகே கார்-லாரி மோதல்: கணவன்- மனைவி பரிதாப சாவு 7 பேர் படுகாயம்


நெல்லை அருகே கார்-லாரி மோதல்: கணவன்- மனைவி பரிதாப சாவு 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 14 May 2018 11:00 PM GMT (Updated: 14 May 2018 10:10 PM GMT)

நெல்லை அருகே காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் கணவன்- மனைவி இருவரும் பலியாயினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

பேட்டை,

நெல்லை மேலப்பாளையம் வசந்தாபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது 30). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு கணினி மையம் மற்றும் டிஜிட்டல் பேனர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அனுசியா (25). இவர்களுக்கு தர்ஷன் என்ற மகன் இருக்கிறான்.

நேற்று முன்தினம் மணி மற்றும் நெல்லை சந்திப்பு அருகே உள்ள விளாகம் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகம் (38) ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் குற்றாலத்துக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக ஒரு காரில் 2 குடும்பத்தினரும் பயணம் செய்தனர். இரவு குற்றாலம் சென்ற அவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

நேற்று அதிகாலை குற்றாலத்தில் இருந்து அனைவரும் காரில் திரும்பினர். காரை தச்சநல்லூரை சேர்ந்த சுரேந்தர் (21) என்பவர் ஓட்டினார். சீதபற்பநல்லூரை கடந்து அபிஷேகப்பட்டி ‘பவர்கிரிட்’ மின்நிலையம் அருகில் கார் வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி எதிரே வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் மணியின் மனைவி அனுசியா காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த மணி, அவருடைய தாய் தனம் (52), தம்பி குமார் (28), சண்முகம், அவருடைய மனைவி செல்வி (33), குழந்தைகள் கார்த்திக் (8), சுபஸ்ரீ (3), டிரைவர் சுரேந்தர் ஆகிய 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் கோல்டன்சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மணி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். மேலும் 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான மணி, அனுஷியா ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றாலம் சென்று விட்டு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் கணவன்- மனைவி இருவரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story