கிருஷ்ணகிரி வழியாக திருப்பதி சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு


கிருஷ்ணகிரி வழியாக திருப்பதி சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு
x
தினத்தந்தி 15 May 2018 4:15 AM IST (Updated: 15 May 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி வழியாக திருப்பதிக்கு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கிருஷ்ணகிரி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக திருப்பதிக்கு சென்றார். சேலத்தில் இருந்து காரில் வந்த அவருக்கு கிருஷ்ணகிரியில் ஆவின் மேம்பாலம் அருகில் மாவட்ட அ.தி.மு.க.வினர் தாரை, தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தமிழக முதல்-அமைச்சரை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜ், எம்.எல்.ஏ.க்கள் பர்கூர் சி.வி.ராஜேந்திரன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் எம்.பி.பெருமாள், கிருஷ்ணகிரி முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து மற்றும் அ.தி.மு.க.வினர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். இதே போல மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோரும் பூங்கொத்து கொடுத்து முதல்-அமைச்சரை வரவேற்றனர்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் சிறிது தூரம் நடந்து சென்று தொண்டர்களை சந்தித்து கை அசைத்தார். பின்னர் அவர் காரில் ஏற தயாரானார். அப்போது 10 பேர் அங்கு ஓடி வந்து, அவரிடம் மனு கொடுக்க முயன்றனர். அவர்களை போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். பிறகு அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவை பெற்று முதல்-அமைச்சரிடம் வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்க வந்த எல்லம்மாள் குடும்பத்தினர் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-

ஓசூரை அடுத்த சானசந்திரத்தில் நாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து, அன்றாட பிழைப்பு நடத்தி வரும் எங்கள் பிள்ளைகள் 5 பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஓசூர் அட்கோ போலீசார் வீட்டிற்குள் நுழைந்து, எங்கள் பிள்ளைகள் 5 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று, சரமாரியாக அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.

இது குறித்து நாங்கள் போலீசாரிடம் கேட்ட போது, இவர்கள் சந்தன மரம் வெட்டி வந்துள்ளார்கள் என கூறுகிறார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் எங்கள் பிள்ளைகளை பிடித்து, வேண்டுமென்றே பொய் வழக்கு போட பார்க்கின்றனர். எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி, எங்கள் பிள்ளைகளை துன்புறுத்தும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story