பெரம்பலூர் வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்


பெரம்பலூர் வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்
x
தினத்தந்தி 15 May 2018 4:30 AM IST (Updated: 15 May 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

பெரம்பலூர்,

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் விபத்துகளை தவிர்க்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.13 கோடியில் தரைவழி மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மருதராஜா எம்.பி. முன்னிலை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் சங்கரசுப்ரமணியன் வரவேற்றார். விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

உலகிலேயே அதிக அளவிலான சாலை வசதி இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் போக்குவரத்திற்காக 53 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் ஒரு லட்சம் கிலோ மீட்டர் நீள சாலைகள் உள்ளன. இது மொத்த நீளத்தில் 2 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால் இந்த சாலைமூலம் சுமார் 80 சதவீதம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.

பாரத பிரதமர் நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றவுடன், உலக தரத்தில் இந்தியாவில் சாலைகள் அமைக்க வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தையும், தரத்தையும் 2 மடங்காக உயர்த்த வேண்டும். அதே நேரத்தில் சாலை விபத்துகளை குறைக்கவும் உத்தரவிட்டார்.

முந்தைய ஆட்சியில் நாள் ஒன்றுக்கு ஒற்றை இலக்கு கி.மீ. தூரத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. தற்போது நாள் ஒன்றுக்கு 28 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த இலக்கு நாள் ஒன்றுக்கு 40 கி.மீ. அளவை எட்டுவதற்காக பாடுபட்டு வருகிறோம். இந்தியாவிலேயே அதிகம் விபத்துகள் தமிழகத்தில் நடக்கின்றன. நாடு முழுவதும் ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உடல் உறுப்புகள் செயல் இழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை எட்டும்.

தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையை மேம்படுத்தி தேசிய நெடுஞ்சாலையாக உயர்த்திட தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 70 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படாத சாலைப்பணிகள் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 78 பகுதிகளில் அதிக சாலை விபத்துகள் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 11 இடங்களில் ஒன்றாக சிறுவாச்சூர் பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் காயம் அடைந்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யாமல் இன்னும் பலர் உயிரிழந்திருக்க கூடும்.

உயிரிழப்புகளை தவிர்க்க இங்கு தரைவழி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் பிப்ரவரி 2019-ல் நிறைவடையும். பிரதமர் நரேந்திரமோடி தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளித்து தமிழக வளர்ச்சிக்காக, தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். ஒவ்வொரு எம்.பி.க்கும் குறைந்தபட்சம் ஒரு திட்டம் சென்றடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க பெரம்பலூர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சகத்திற்கும், மத்திய மந்திரியிடமும் பெரம்பலூர் வழியாக ரெயில் போக்கு வரத்து தொடங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் தலைவர் சிவசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய முதுநிலை மேலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். 

Next Story