முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் - நாராயணசாமி


முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் - நாராயணசாமி
x
தினத்தந்தி 15 May 2018 5:30 AM IST (Updated: 15 May 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீரவேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 16.2.2018 அன்று தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது. இதை அமல்படுத்தும் விதமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். அதன் அடிப்படையில் மத்திய நீர்வள அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வரையறையை தாக்கல் செய்துள்ளது.

அதில் கண்காணிப்பு குழு, மேலாண்மை வாரியம் அல்லது கமி‌ஷன் என பல கருத்துகளை கூறியுள்ளது. புதுவை அரசை பொறுத்தவரை இந்த வி‌ஷயத்தில் முழு அதிகாரம் பெற்ற அமைப்பை உருவாக்கியே தீர வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலம் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டல் மேலாண்மை வாரியம் நேரடியாக தலையிட்டு தண்ணீரை திறக்கவேண்டும்.

எந்தெந்த காலத்தில் எவ்வளவு தண்ணீர் திறக்கவேண்டும் என்பது குறித்து கண்காணிக்க உரிய அதிகாரம் பெற்ற அமைப்பு இருந்தால்தான் சரியாக இருக்கும். மத்திய அரசின் வரைவு முழுமையாக கிடைக்கவில்லை. அதை பார்த்துவிட்டு அதில் மாற்றம் தேவையென்றால் நமது மாநிலத்தின் கருத்துகளை கொடுப்போம்.

காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தீர்ப்புகள் பல காலங்களில் அமல்படுத்தப்படவில்லை. எனவே சகல அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் இறுதி தீர்ப்பினை அமல்படுத்த முடியும். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் வரையறையில் பல குழப்பங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story