அந்தியூரில் இருந்து பர்கூருக்கு கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் மலைக்கிராம மக்கள் கோரிக்கை
அந்தியூரில் இருந்து பர்கூருக்கு கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 33 மலைக்கிராமங்கள் உள்ளது. இங்கு மொத்தம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் மேற்கொள்ளுதல் ஆகும். மேலும் அந்தியூர், பவானி, ஈரோடு, திருப்பூர், கோவை என பல்வேறு ஊர்களில் கட்டிட தொழில் செய்து வருகின்றனர்.
மருத்துவமனைக்கு செல்ல மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வாங்க சுமார் 40 கி.மீ. தூரத்தில் உள்ள அந்தியூருக்கு செல்லவேண்டும். அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதி வழியாக கர்காகண்டி வரை 2 தனியார் பஸ்களும், 2 அரசு பஸ்களும் சென்று வருகின்றன. மேலும் பர்கூர் மலைப்பகுதி வரை மொத்தம் 4 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்கள் அந்தியூரில் இருந்து அதிகாலையில் 4.30 மணிக்கும் மாலையில் 4.30 மணிக்கும் புறப்பட்டு பர்கூர் மலைப்பகுதிக்கு செல்லும். மாலை 4.30மணிக்கு மேல் பர்கூர் மலைப்பகுதிக்கு பஸ் கிடையாது. அதன்பின்னர் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதிக்கு செல்ல முடியாது. அன்று இரவு அந்தியூரில் பஸ் நிலையத்திலேயே தங்கியிருந்து மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தான் செல்ல முடியும்.
இதன் காரணமாக அந்தியூரில் இருந்து பர்கூர் மற்றும் மைசூர் பகுதிகளுக்கு சரக்கு வாகனத்தில் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு மலைப்பாதையில் சரக்கு வாகனத்தில் செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதங்கள் நிகழ்ந்து வருகின்றன.
மேலும் பர்கூர் மலைப்பகுதியில் இருந்து தினமும் அந்தியூருக்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. வேலைக்கு செல்பவர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் என பலர் அந்த பஸ்களிலேயே பயணம் செய்கிறார்கள். இதனால் ஒரு சிலர் ஆபத்தை உணராமல் தனியார் பஸ் மேற்கூரையின் மீது அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது.
ஆபத்தான வளைவான பகுதி மற்றும் மின்கம்பத்தின் கம்பிகள் மிகவும் தாழ்வான இடங்களில் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் பர்கூர் மலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்கவேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.