மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் ரே‌ஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு


மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் ரே‌ஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 May 2018 11:00 PM GMT (Updated: 14 May 2018 10:32 PM GMT)

மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் ரே‌ஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பெருந்துறை பட்டக்காரன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் ரே‌ஷன் கடையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன் கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகளை ஒப்படைப்பதற்காக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது, ரே‌ஷன் கார்டுகளை கையில் ஏந்தியபடி கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பிக்கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கோ‌ஷங்களை எழுப்பக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள். அதன்பின்னர் பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் பொதுமக்கள் கூறிஇருந்ததாவது:–

பட்டக்காரன்பாளையத்தில் 350–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் அருகில் உள்ள கிராமமான ஆயிகவுண்டம்பாளையத்தில் உள்ள ரே‌ஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்குகிறோம். அந்த கடையில் 1,300–க்கும் மேற்பட்ட ரே‌ஷன் கார்டுதாரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் கூட்டம் அதிகமாக இருக்கிறது. நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருவதால், கடைக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது. மேலும், தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை. எனவே எங்கள் பகுதியான பட்டக்காரன்பாளையத்தில் ரே‌ஷன் கடை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

அதன்பின்னர் ஒரு அரசு கட்டிடத்தில் ரே‌ஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் ரே‌ஷன் கடையை திறக்காமல் திடீரென அந்த கட்டிடத்தை நூலகமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே எங்கள் பகுதியில் ரே‌ஷன் கடை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்தமனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே கோட்டுப்புள்ளாம்பாளையம் அலிங்கியம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘‘எங்கள் பகுதியில் 150–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆனால் 80 வீடுகள் மட்டுமே உள்ளன. இதனால் ஒரு குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்ட வீட்டில் 2 மற்றும் 3 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். எங்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறிஇருந்தனர்.

இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘அக்கரை கொடிவேரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெருமாள் கோவில் உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

விஜயமங்கலம் சின்னவீரசங்கிலி பச்சாகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கொடுத்த மனுவில், ‘‘மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட கைத்தறி ரக துணிகளை விசைத்தறியில் உற்பத்தி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, உற்பத்தி செய்யப்பட்ட துணிகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்’’, என்று கூறிஇருந்தார்.

ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் கொடுத்த மனுவில், ‘‘ஈரோடு ஜின்னா வீதியில் உள்ள ரே‌ஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவாக உள்ளது. எனவே அந்த கடையில் நடக்கும் முறைகேட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க தலைவர் ஈ.வி.கே.சண்முகம், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தார். இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 221 மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

கூட்டத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் கல்வித்தொகை, ஓய்வூதியம் என 64 பேருக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா வழங்கினார். இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story