உத்தரவை செயல்படுத்தாததால் கலால் துறை அதிகாரிக்கு கலெக்டர் கண்டிப்பு
தேனியில் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாததால் கலால்துறை அதிகாரியை கலெக்டர் கண்டித்தார். வருகிற 18–ந்தேதிக்குள் அவற்றை மூடுவதற்கு கலெக்டர் கெடுவிதித்தார்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை கலெக்டர் வாங்கினார். மக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், இக்கூட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் 18 பேருக்கு மொத்தம் ரூ.91 ஆயிரத்து 480 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி இயக்க தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், ‘வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவுக்காக வாகன போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது. போக்குவரத்தை புறவழிச்சாலை வழியாக இயக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்தோம். புறவழிச்சாலை வழியாகவே போக்குவரத்து இயக்கப்படும் என்று நம்பினோம். ஆனால், மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே, சோதனை அடிப்படையிலாவது இந்த ஆண்டு போக்குவரத்தை புறவழிச்சாலை வழியாக இயக்கிப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். தேனி நகர பஸ்களில் காமராஜர் பஸ் நிலையம் என்பதற்கு பதில் பழைய பஸ் நிலையம் என்று உள்ளது. அதை காமராஜர் பஸ் நிலையம் என்று எழுத வேண்டும். இல்லை எனில், ஜூலை 15–ந்தேதி டவுன்பஸ்களில் காமராஜர் பஸ் நிலையம் என ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். அப்போது அவர்கள், ‘தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என மனு கொடுத்தோம். அந்த கடைகளை இடமாற்றம் செய்ய நீங்கள் (கலெக்டர்) உத்தரவிட்டு இருந்தீர்கள். ஆனால், இன்னும் கடைகள் இடமாற்றம் செய்யப்படவில்லை’ என்று கூறினர்.
இதைக்கேட்டதும், கலால் துறை உதவி ஆணையர் கார்த்திகேயனை கலெக்டர் அழைத்து, ‘கடைகளை இன்னும் ஏன் அகற்றவில்லை?’ என்று கேட்டார். அப்போது, உதவி ஆணையர், ‘மாற்று இடம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். மாற்று இடம் கிடைத்தவுடன் கடைகளை இடமாற்றி விடுகிறோம்’ என்றார்.
இதைக் கேட்ட கலெக்டர், ‘மாற்று இடம் கிடைக்க ஒரு ஆண்டு ஆனாலும், அதுவரை கடையை அங்கேயே செயல்பட அனுமதிப்பீர்களா?’ என்று கண்டித்ததுடன், ‘வருகிற 18–ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) மாற்று இடம் பார்த்து கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த கடைகளை மட்டும் மூடிவிட்டு, மாற்று இடம் கிடைத்தவுடன் அங்கு திறக்க நடவடிக்கை எடுங்கள்’ என்று உத்தரவிட்டார்.
பா.ஜ.க. தேனி மண்டல பொதுச்செயலாளர் மனோகரன், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘மாவட்டத்தில் 40–க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் உரிமம் இன்றி செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளிலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
தேவதானப்பட்டி அருகில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் வடக்கு காலனியை சேர்ந்த மக்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சாலை வசதி இல்லை. பஸ் நிறுத்தமும் இல்லை. இதுகுறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பே கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தேனி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயிகள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் ஊரில் 600 ஏக்கர் நஞ்சை நிலம், 1200 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. இந்த நிலம் அனைத்தும் வைகை ஆற்றை நம்பியே உள்ளன. எனவே இப்பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.