கூடலூர், பந்தலூர் தாலுகாவில் சம்பளம் வழங்காததை கண்டித்து டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கூடலூர், பந்தலூர் தாலுகாவில் சம்பளம் வழங்காததை கண்டித்து டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 May 2018 4:45 AM IST (Updated: 15 May 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்காததை கண்டித்து டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் மற்றும் நடுவட்டம், கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் அரசு தேயிலை தோட்டங்களும், 6 டேன்டீ தொழிற்சாலைகளும் உள்ளன. இங்கு 200 டேன்டீ பணியாளர்க ளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அரசு தேயிலை தோட்ட கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் பல ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

இதனால் அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களும் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் நிதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கப்பட வில்லை. இதனால் அரசு தேயிலை தோட்டங்கள் தொடர்ந்து நலிவடைந்து வருகிறது.

இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள டேன்டீ தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சம்பளம் இதுவரை வழங்கப்பட வில்லை. இதனால் தொழிலாளர் மற்றும் பணியாளர் குடும்பத்தினர் பாதிக்கப் பட்டு உள்ளனர். நிதி நெருக்கடியில் டேன்டீ நிர்வாகம் உள்ளதால் சம்பளம் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து வங்கி மூலம் கடனுதவி பெற்று தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க டேன்டீ நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் நேற்று பணிக்கு வந்த டேன்டீ தொழிலாளர்கள் காலை 8 முதல் 9 மணி வரை டேன்டீ அலுவலகங்கள் முன்பு சம்பளம் வழங்க கோரி கோ‌ஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அனைவரும் வேலைக்கு சென்றனர். பின்னர் பகல் 11 மணிக்கு மீண்டும் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு டேன்டீ அலுவலகங்கள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடலூர் பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் அனைத்து பகுதியிலும் டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story