குடியிருப்பு பகுதியில் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


குடியிருப்பு பகுதியில் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 14 May 2018 11:18 PM GMT (Updated: 14 May 2018 11:18 PM GMT)

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மதுரை-ராமேசுவரம் சாலை அமைக்கும் திட்டத்தில் குடியிருப்பு பகுதியில் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

பரமக்குடி தாலுகா பாண்டியன் தெரு மற்றும் எஸ்.பி.எம்.காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் கடந்த 35 ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருந்து வருகிறோம். நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வரி, மின்வாரிய ரசீது, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்தும் எங்கள் வீடுகளின் முகவரிக்கு பெற்றுள்ளோம்.

இந்தநிலையில் நாங்கள் குடியிருக்கும் பகுதி அரசின் புறம்போக்கு நிலத்தில் உள்ளதால் உடனடியாக காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளோம். ஆனால், இதனை மீறி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோர்ட்டு உத்தரவினை பொருட்படுத்தாமல் எவ்வித முன்அறிவிப்பும் இன்றி வீடுகளை இடித்து தரை மட்டமாக்கி விட்டனர். மீதம் உள்ள வீடுகளையும் இடிக்க முயன்று வருகின்றனர். எனவே உடனடியாக இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதோடு, இத்தனை ஆண்டுகாலமாக வசித்துவரும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

ராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை காலனி பொதுமக்கள் திரளாக வந்து அளித்த மனுவில், நாங்கள் இந்த பகுதியில் கடந்த 40 வருடங்களாக குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது மதுரை-ராமேசுவரம் நான்குவழிச்சாலை திட்டத்திற்காக சர்வே செய்து எங்கள் நிலத்தில் கல் ஊன்றி உள்ளனர். ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த நாங்கள் தினந்தோறும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்கள் நிலத்தின் அருகில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

அந்த நிலத்தில் சாலை அமைத்தால் நேராகவும், வளைவுகள் இல்லாமலும் இருக்கும். எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் குடியிருப்பு பகுதியில் சாலை அமைக்காமல் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

Next Story