அரசு வேலை வாங்கித்தருவதாக பலரிடம் மோசடி: பெண் கைது


அரசு வேலை வாங்கித்தருவதாக பலரிடம் மோசடி: பெண் கைது
x
தினத்தந்தி 15 May 2018 5:15 AM IST (Updated: 15 May 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

வணிக வரித்துறை அதிகாரி போல் நடித்து ஏமாற்றி, அரசு வேலை வாங்கித்தருவதாக பலரிடம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ. காலனியை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் தங்கவேலு, மதுரை வடக்கு சித்திரை வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு எனது கடைக்கு வந்த மீனா (வயது 35) என்பவர் தான் வணிக வரித்துறையில் வேலை பார்ப்பதாகவும், தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் என்றும் கூறினார். அதன்பேரில் நிறைய நபர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் தற்போது பணம் கொடுத்தால் வணிக வரித்துறையில் வேலை வாங்கலாம் எனவும் தெரிவித்தார்.

இதனை நம்பிய நான், எனக்கு தெரிந்த நண்பர்கள் 11 பேரிடம் சுமார் ரூ.50 லட்சம் வாங்கி, மீனாவின் வங்கிக் கணக்கில் செலுத்தினேன். அதன்பின்னர் மீனா, என் நண்பர் மகன் ஹாஷாஷெரீப் என்பவருக்கு ஒரு பணி நியமன ஆணையை வழங்கினார். அது, தமிழ்நாடு அரசு வணிக வரித்துறை கொடுத்ததுபோல் இருந்தது.

அந்த ஆணையை மதுரை வணிக வரி அலுவலகத்தில் காண்பித்தபோது அது போலியானது என தெரியவந்தது. இதுபற்றி, நான் என் நண்பர்களுடன் சென்று மீனாவிடம் கேட்டேன். அவர், “பொறுத்திருங்கள் மீண்டும் வேலை வாங்கித் தருகிறேன்“ என்று கூறினார். ஆனால் அவர் கூறியதுபோல் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அப்போது தான் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார்.

விசாரணையில், மீனாவும் அவருடைய குடும்பத்தினரும் நாகமலைபுதுக்கோட்டை ராஜம்பாடி, திருநகர் ஆகிய பகுதிகளில் பல்பொருள் அங்காடி நடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. போலீசார், மீனாவிடம் விசாரணை நடத்தியபோது அவர் இதுபோன்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்னன் எச்சரித்துள்ளார். 

Next Story