மத்திய அரசு அதிகாரி பணிகளில் சேர பட்டதாரிகளுக்கான எழுத்து தேர்வு


மத்திய அரசு அதிகாரி பணிகளில் சேர பட்டதாரிகளுக்கான எழுத்து தேர்வு
x
தினத்தந்தி 15 May 2018 12:35 PM IST (Updated: 15 May 2018 12:35 PM IST)
t-max-icont-min-icon

பட்டப்படிப்பு படித்தவர்களை மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு அதிகாரி பணியிடங்களுக்கு நியமிக்கும் `ஸ்டாப் செலக்சன் கமிஷன்' எழுத்து தேர்வு (டையர் 1) அறிவிக்கப்பட்டு உள்ளது.

எஸ்.எஸ்.சி. என சுருக்கமாக குறிப்பிடப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு அதிகாரி பணியிடங்களை நிரப்பும் ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது மத்திய வருவாய்த்துறை, பாராளுமன்ற செயலக சேவை, ரெயில்வே துறை, உள்துறை அமைச்சகம், நுண்ணறிவு பிரிவு, தேசிய புலனாய்வு அமைப்பு, சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குரூப்-பி, குரூப்-சி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வை அறிவித்து உள்ளது. `காம்பைன்டு கிராஜூவேட் லெவல் எக்சாம்-2018 (டையர்-1)' எனப்படும் தேர்வு மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்தத் தேர்வு வருகிற ஜூலை 25-ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு 20-ந் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் டையர்-2 தேர்வு எழுத முடியும். அதிலும் தேர்ச்சி பெற்றால் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இவர்கள் ஆண்டுதோறும் அரசு விதிகளின்படி கிரேடு ஊதிய உயர்வும் பெறலாம். குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் அடுத்தகட்ட தேர்வுமுறைகள் பின்பற்றப்படும். இந்த தேர்வுகள் மூலம் ஆண்டுதோறும் கணிசமான அளவில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள காலியிட விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1988 மற்றும் 1-8-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம், இன்னும் சில பணிகளுக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு பிளஸ்-2 வகுப்பில் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்க்கலாம்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர், பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்களுக்கு இந்த கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு (டையர்-1, டையர்-2) விவரித்தல் தேர்வு (டையர்-3), திறமைத் தேர்வு, (டையர்-4) மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு உடல்தகுதி பரிசோதிக்கப்படும். டையர்-3, டையர்-4 தேர்வுகள் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமானது என்பது குறிப்பிடத் தக்கது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வழியாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும். 4-6-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். 

Next Story