வாய்ப்புகள் நிறைந்த அறிவியல் பட்டப்படிப்புகள்!
அறிவியல் பட்டப்படிப்புகளைப் படித்து ஏறத்தாழ பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இணையாக அல்லது அவர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பை பெற முடியும்.
சராசரி மதிப்பெண் மாணவர்கள் சாதிக்க ஏற்றது இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள். மதிப்பெண் குறைவு மற்றும் அதிக செலவுத் தொகை ஆகியவற்றால் என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற துறைகளை தேர்வு செய்ய முடியாதவர்கள், அறிவியல் பட்டப்படிப்புகளைப் படித்து ஏறத்தாழ பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இணையாக அல்லது அவர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பை பெற முடியும். உதாரணமாக அதிக செலவு செய்து மருத்துவம் படிக்க முடியாதவர்கள், பி.எஸ்சி. மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளை படித்து மருத்துவத்துறையில் கவுரவமான பணி வாய்ப்பை பெற முடியும். நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் பட்டப்படிப்புகள் உள்ளன. பொதுவாக பலரும் அறிந்த இளநிலை அறிவியல் படிப்புகளைக் கடந்து வாய்ப்புகள் நிறைந்த பல்வேறு பட்டப்படிப்புகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...
என்ன தகுதி தேவை
கணிதம், அறிவியல் பாடங்கள் உள்ளடங்கிய பிரிவில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றவர்கள், இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம். என்ஜினீயரிங், மருத்துவம்போல இதற்கு குறிப்பிட்ட ‘கட்ஆப்’ மதிப்பெண் சதவீதங்கள் எதுவும் கேட்கப்படுவதில்லை. தேர்ச்சி சதவீதமே கணக்கில் கொள்ளப்படுகிறது.
அறிவியல் பட்டப்படிப்புகளில் 112 வகையான படிப்புகள் உள்ளன. பிஎஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியியல், கணினி அறிவியல் போன்ற ஒருசில படிப்புகளைப் பற்றியே நாம் பொதுவாக அறிந்திருப்போம். ஆனால் இன்னும் ஏராளமான பிரிவில் வாய்ப்புகள் மிக்க பட்டப்படிப்புகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள 15 ஆயிரத்து 732 கல்லூரிகளில் இந்த அறிவியல் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. 30 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவுக்குள் இதில் பெரும்பாலான படிப்புகளை படிக்கலாம். குறிப்பிட்ட சில படிப்புகளைப் பற்றி இனி பார்ப்போம்...
பி.எஸ்.சி. ஹாஸ்பிடலிட்டி மேனேஜ்மென்ட்
மருத்துவமனை நிர்வாகம் பற்றிய பட்டப்படிப்பு இது. 3 ஆண்டு படிப்பான இதை முழுநேர படிப்பாக மட்டுமே படிக்க முடியும். இந்தியா முழுவதும் 4 கல்லூரிகளில் மட்டுமே இந்த படிப்பை படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் வேலைவாய்ப்பை பெற்றுத் தரக்கூடியது இந்த பட்டப்படிப்பு. சில கல்லூரிகள் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பையும் இதனுடன் இணைத்து ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஓட்டல் மேனேஜ்மென்ட் என்ற சிறப்பு படிப்பாக வழங்குகின்றன. 9 கல்லூரிகளில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்பானது மருத்துவமனைகள் மட்டுமல்லாது உலகளாவிய நட்சத்திர ஓட்டல்கள், சுற்றுலா நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருகின்றன. இதையும் 3 ஆண்டு கால படிப்பாக படிக்க முடியும்.
பி.எஸ்சி. மெடிக்கல்
மருத்துவம் சார்ந்த மற்றொரு அறிவியல் பட்டப் படிப்பு பிஎஸ்சி. மெடிக்கல். நாடு முழுவதும் உள்ள 126 கல்லூரிகளில் இந்த படிப்பு வழங்கப்படுவதால் எளிதாக படிக்க வாய்ப்பு கிடைக்கும். மனிதனின் உடம்பு பற்றிய விஷயங்கள், உடலில் மருந்து செயல்படும் விதம், உடல் காட்டும் எதிர்விளைவுகள், மருந்து தயாரிப்பின் அடிப்படைகள் மற்றும் மருந்து பற்றிய ஆய்வுகள் பற்றி படிக்கலாம். இதனால் மருத்துவமனை, மருந்து தொழிற்சாலைகள், மருந்தகங்கள், கிளினிக்குகள், மருத்துவ ஆய்வகங்கள், மருத்துவ கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம். இதை மெடிக்கல் டெக்னாலஜிஸ்ட், லேப் அசிஸ்டன்ட், டெஸ்ட் சூப்பர்வைசர் உள்ளிட்ட பணிகளில் சேரலாம். இதனுடன் நெருங்கிய தொடர்புடைய மற்றொரு அறிவியல் பட்டப்படிப்பு பயோமெடிக்கல் சயின்ஸ். இதுவும் மூன்றாண்டு படிப்பாகும்.
பி.எஸ்சி. நியூட்ரிசியன் அண்ட் டயட்ரிக்ஸ் B.SC (NUTRITION & DIETETICS)
ஊட்டச்சத்து நிபுணத்துவம் வழங்கும் அறிவியல் பட்டப்படிப்பு இது. சமீபகாலமாக பெருகிவரும் நோய்கள், உடல்நலக் கோளாறுகள் மனித சமூகத்தையே சத்துணவு மற்றும் உணவுக்கட்டுப்பாடு பற்றி சிந்திக்க வைத்துள்ளது. மருத்துவத் துறையிலும் சத்துணவு நிபுணரின் தேவை அதிகரித்துள்ளது. இதை பட்டப்படிப்பாக தேர்வு செய்து படித்தால் சீக்கிரமே பிரகாசமான பணிவாய்ப்பைப் பெறலாம். 52 கல்லூரிகளில் இந்த பட்டப்படிப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்சி. அனட்டாமி
மனித உடற்கூறு பற்றிய பட்டப்படிப்பு இது. மருத்துவத்தில் அடிப்படையாக இருக்கும் இதை தனி பட்டப்படிப்பாக 7 கல்லூரிகள் வழங்குகின்றன. 3 ஆண்டு காலம் கொண்டது இந்த படிப்பு. மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் ஆய்வகங்களில் பணி வாய்ப்பை பெற முடியும். இதேபோல மானுடவியல் (பி.எஸ்.சி. ஆந்த்ரோபாலஜி) பட்டப்படிப்பையும் 38 கல்லூரிகள் வழங்குகின்றன.
‘நீட்’ தேர்வு இல்லாமலே இந்த மருத்துவம் சார்ந்த பிஎஸ்.சி மருத்துவ அறிவியல் பட்டப்படிப்புகளை படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சில கல்வி நிறுவனங்கள் மட்டும் மெடிக்கல், பயோமெடிக்கல் படிப்புகளுக்கு தனியே நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கிறது.
ஏரோநாட்டிக்கல் சயின்ஸ்
என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து இந்த படிப்பை படிக்க முடியாதவர்கள், அறிவியல் கலைக்கல்லூரியிலேயே இந்த பட்டப்படிப்பை படிக்கலாம். 3 ஆண்டுகால படிப்பான இது என்ஜினீயரிங் பட்டதாரிகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை வழங்கும். ஏராளமான பொறியியல் கல்லூரிகளில் இந்த பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. அறிவியல் பட்டப்படிப்பாக 5 கல்லூரிகளில் மட்டுமே இந்த படிப்புகள் உள்ளன. விமான என்ஜினீயராகவும், விமான டெக்னீசியனாகவும், விமான ஆபரேட்டராகவும், பைலட் ஆகவும், விரிவுரையாளராகவும், விமான நிலை கட்டுப்பாட்டாளராகவும் பணிவாய்ப்பை பெறலாம். விமான நிலைய இயக்குனராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் கொண்ட படிப்பு இது.
பிஎஸ்சி. பிஸரிஸ் சயின்ஸ்
மீன்வள அறிவியல் பற்றிய பட்டப்படிப்பு இது. 4 ஆண்டு கால அளவைக் கொண்டது. முழு நேர படிப்பாக மட்டுமே படிக்க முடியும். சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகம் உள்பட 28 கல்லூரிகளில் இந்த படிப்பை படிக்க முடியும். உணவுத்துறை, மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற முடியும். சுயதொழில் வாய்ப்பையும் உருவாக்க முடியும்.
பிஎஸ்சி. அக்வாகல்ச்சர் BFSC (AQUACULTURE) என்பது நீர், நீர்நிலைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பற்றிய பட்டப்படிப்பு. 4 ஆண்டு காலத்தைக் கொண்டது. பல கல்லூரிகள் பிஸரிஸ் சயின்ஸ் படிப்புடன் இணைத்தே இந்த படிப்பையும் வழங்குகிறது.
பி.எஸ்.சி. அனிமேஷன் B.SC (ANIMATION & VFX)
இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. அவர்களை பெரிதும் ஈர்ப்பது இணைய தளங்களில் வரும் அனிமேஷன் கதைகளும், விளையாட்டுகளும்தான். அனிமேஷன் காட்சிகளை உருவாக்குவது தொடர்பான பட்டப்படிப்பு பி.எஸ்சி. அனிமேஷன் மற்றும் வி.எப்.எக்ஸ். 15 கல்லூரிகளில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.சொந்தமாக இணையதள பக்கம் உருவாக்கி விளையாட்டுகள், அனிமேஷன் காட்சிகளை வெளியிடலாம். இணைய நிறுவனங்கள், கணினி நிறுவனங்கள், விளையாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்பு பெற முடியும்.
இதேபோல பிஎஸ்.சி. பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், மைக்ரோபயாலஜி, பயோ இன்பர்மேடிக்ஸ், அப்ளைடு பிசிக்ஸ், அப்ளைடு ஹெமிஸ்ட்ரி, அப்ளைடு நியூட்ரிசியன் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளும் வாய்ப்புகள் நிறைந்ததாக உள்ளன. இவற்றை தேர்வு செய்து படித்து தங்கள் அறிவையும், வாழ்வையும் வளப்படுத்திக் கொள்ளலாம்!
Related Tags :
Next Story