என்ஜினீயரிங் இணைய கவுன்சிலிங் எப்படி நடைபெறுகிறது?


என்ஜினீயரிங் இணைய கவுன்சிலிங் எப்படி நடைபெறுகிறது?
x
தினத்தந்தி 15 May 2018 12:44 PM IST (Updated: 15 May 2018 12:44 PM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை, இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியே நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் இணைய கவுன்சிலிங்கை எதிர்கொள்ள தடுமாறலாம் என்பதால் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. முதல்முறையாக இணையதளம் வழியே கவுன்சிலிங் நடப்பது நகர்ப்புற மாணவர்களுக்கும் பதற்றம் தரலாம். இணைய கவுன்சிலிங் எப்படி நடைபெறுகிறது, அதை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி சிறிது பார்ப்போம்...

மே மாதம் முழுவதும் (30-ந்தேதி வரை) என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் சேர விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்களின் ‘கட்-ஆப்’ மார்க் அடிப்படையில் யாருக்கு எப்போது கவுன்சிலிங் என்பது பற்றிய விவரம் விண்ணப்பதாரர்களுக்கு மெயில் மூலம் வழங்கப்படும். அந்தத் தேதியில் இணையதளம் வழியே கவுன்சிலிங்கை எதிர்கொள்ள வேண்டும் மாணவர்கள். வழக்கம்போல அவர்கள் விருப்பத்தின்படியே கல்லூரியையும், படிக்கும் துறையையும் தேர்வு செய்யலாம்.

இந்த கவுன்சிலிங் முறை 9 படிநிலைகளின் கீழ் நடக்கிறது. விண்ணப்பம் நிரப்புதல், ரேண்டம் எண் ஒதுக்குதல், சான்றிதழ் சரிபார்த்தல், ரேங்க் வழங்குதல், டெபாசிட் தொகை கட்டுதல், இணைய கவுன்சிலிங், ஒதுக்கீடு பட்டியல், மேல்முறையீடு, இறுதிக்கட்ட பட்டியல் போன்ற பல படிநிலைகளில் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. விண்ணப்பப் பதிவு மே மாதத்துடன் முடிவடைகிறது. ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி ஜூலை 2-ம் வாரம் வரை இந்த நடைமுறைகள் தொடர்கின்றன.

1. விண்ணப்பதாரர்கள் /tnea.ac.in/ இணையதளம் சென்று தங்கள் பெயருக்கு ஒரு கணக்கு தொடங்கி, பின்னர் விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்கலாம். அப்போது, பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் எஸ்.சி.ஏ. பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதுமானது.

2. பின்னர் டி.என்.இ.ஏ. அமைப்பானது நீங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் உங்களுக்கான ரேண்டம் எண்ணை ஒதுக்கித்தரும்.

3. இவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட இடங்களில் சான்றிதழ் சரிபார்த்தல் முகாம்கள் நடைபெறுகிறது. அப்போது அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். பின்னர் அவர்களுக்கு ரேண்டம் எண்ணுடன், ரேங்க் பட்டியலும் தரப்படும்.

4. இந்த ரேங்க் பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் வெளியிடப்படும். அதில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை கவுன்சிலிங் செல்ல உள்ள மாணவர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

5. பின்னர் ஆரம்ப கட்ட மாணவர் சேர்க்கை கட்டணத்தை செலுத்த வேண்டும். முதல்கட்டமாக ரூ.5000-ஐ செலுத்த வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., எஸ்சி.ஏ. பிரிவினர் ரூ.1000, செலுத்தினால் போதுமானது. இந்த கட்டணத்தை நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாக செலுத்தலாம். டி.டி.யாகவும் செலுத்தலாம்.

6. பின்னர் இணையதள கவுன்சிலிங்கிற்கான நாளில், நீங்கள் உங்கள் கணக்கின் வழியே சென்று விரும்பும் படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்யலாம். வீட்டில் இருந்தபடியும், அல்லது கணினி வசதி உள்ள இடத்தில் இருந்து கவுன்சிலிங்கை எதிர்கொள்ளலாம். ஜூலை முதல் வாரத்தில் இந்த கவுன்சிலிங் நடைபெறும். நீங்கள் தேர்வு செய்த கல்லூரி மற்றும் படிப்பிற்கான ரசீது பிரிண்ட் அவுட்டாக கிடைக்கும்.

7. இப்படி சீட் ஒதுக்கப்பட்டதையும் இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள். இதிலும் தாங்கள் தேர்வு செய்த கல்லூரியும், படிப்பும் சரியாக உள்ளதா என்பதை விண்ணப்பதாரர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

8. சீட் ஒதுக்கீடு பட்டியலில் தவறுகள் இருந்தால் முறையிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

9. ஒதுக்கப்பட்ட இடங்கள் பற்றிய பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டபின், கடைசியாக இறுதிக்கட்ட பட்டியல் வெளியிடப்படுகிறது. இது உங்கள் இமெயில் முகவரிக்கும் வரும்.

டிப்ஸ்...

சான்றிதழ் சரிபார்க்கும் முகாமுக்கு செல்பவர்கள், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் முதல், சாதிச்சான்று, மாற்றுச்சான்று, அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் மற்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். இது பற்றிய பட்டியல் இணையதளத்தில் உள்ளது. உங்களது அழைப்பு மெயிலிலும் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

மாற்றுத்திறனாளிகள், இட ஒதுக்கீடு அடிப்படையில் கட்டண சலுகை பெறுபவர்கள் போன்றவர்கள் அதற்கான சான்றுகளை சான்றிதழ் சரிபார்க்கும் முகாமிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆன்லைன் கவுன்சிலிங்கின்போது உங்களிடம் யாரும் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். உங்களுக்கான நுழைவு எண்ணின் வழியே உள்ளே சென்று, படிக்க விரும்பும் படிப்பு அடுத்ததாக கல்லூரி ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்குப் போதுமான அவகாசம் வழங்கப்படும் என்பதால் நிதானமாகவே தேர்வு செய்யலாம். இறுதியில் படிப்பையும், கல்லூரியையும் தேர்வு செய்து “சப்மிட்” முடித்துவிட்டால் திரும்ப திருத்தம் செய்ய முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இது பற்றிய விரிவான விவரங்களை கவுன்சிலிங் நெருங்கும்போது பல்கலைக்கழகம் விரிவாக அறிவிக்கும்.

விண்ணப்பதாரர்கள் இது பற்றிய சந்தேகங்களை tnea2018@annauniv.edu என்ற மெயில் முகவரியிலும், 044-22359901 (20 லைன்கள்) என்ற டெலிபோன் எண் வரிசையிலும் தொடர்பு கொண்டு சந்தேக நிவர்த்தி பெறலாம். 

Next Story