பல பிரபஞ்சங்கள் இருப்பது சாத்தியமே


பல பிரபஞ்சங்கள் இருப்பது சாத்தியமே
x
தினத்தந்தி 15 May 2018 3:08 PM IST (Updated: 15 May 2018 3:08 PM IST)
t-max-icont-min-icon

அண்டவெளியில் பல பிரபஞ்சங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட விஞ்ஞானிகள் சமீப காலமாக பதிவு செய்து வந்தனர்.

ஒரு மனிதனை முடக்குவது ஒரு விபத்தாக, நோயாக, சக மனிதர்களாக, இப்படி எதுவாகவும் இருக்கலாம். அதனை எதிர்த்து போராடாமல், பயந்து, தன்னம்பிக்கையற்று முடங்கிப்போவதற்கு ஒருவன் தயாராக இருந்துவிட்டால் போதும், அவனுடைய தோல்வியை மிக எளிதாக அவனே உறுதி செய்கிறான் என்றே அர்த்தம்.

ஆனால், வாழ்க்கை தான் செல்லும் வழியில் வரிசைக் கட்டி வைக்கும் தடைகளை, ஆபத்துகளை, அதிர்ச்சிகளை கண்டு அஞ்சி நடுங்கி முடங்கிப்போகாமல், எதிர்நீச்சல் போட்டு தனக்கு முன்னே இருக்கும் தடைக்கற்களையே தனக்கான வெற்றிப் படிக்கற்களாக மாற்றி ஜொலிப்பவர்கள் வெகு சிலரே.

அத்தகைய அசாதாரண மற்றும் அரிய சாதனையாளர்களுள் ஒருவர் உலகப் புகழ்பெற்ற கருத்தியல் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங். ஆனால், தனது 21-வது வயதிலேயே, ஒரு வகை நரம்பு முடக்கு வாதம் அவரை தாக்கியது. இதனால், உணவு விழுங்குவது மற்றும் சுவாசிப்பதைக் கூட தடை செய்யக்கூடிய ஆபத்தான நோயான, மோட்டார் நியூரான் டிசீஸ் (Motor Neurone Disease-MND) என்ற நோயால் ஸ்டீபன் ஹாக்கிங் பாதிக்கப்பட்டார்.

ஆனாலும், ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாடு மற்றும் அண்டவியல் பாடங்களில் முனைவர் பட்ட ஆய்வைத் தொடங்கி நான்கே வருடங்களில் முனைவர் பட்டம் பெற்றார். உலகப் புகழ்பெற்ற (A briefer History of Time உள்ளிட்ட) பல நூல்கள், கருதுகோள்களை உருவாக்கினார். உலகின் பல உயரிய விருதுகள் மற்றும் பரிசுகளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி மரணமடைந் தார்.

மரணத்துக்கு சில நாட்கள் முன்பு வரை தனது இறுதி ஆய்வான பிரபஞ்ச தோற்றம் தொடர்பான ‘முடிவற்ற வீக்கத்திலிருந்து ஒரு விடுதலை’ (A Smooth Exit from Eternal Inflation) எனும் பொருள்படும் ஒரு ஆய்வறிக்கையை எழுதிக்கொண்டிருந்தார் ஹாக்கிங்.

நம் பூமி உள்ளிட்ட சூரிய மண்டலம் கொண்ட பிரபஞ்சம் இருக்கும் விண்வெளியில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரபஞ்சங்கள் (Multiverse) இருப்பது சாத்தியமே எனும் கருதுகோளை தக்க விளக்கங்களோடு முன்வைக்கும் அந்த ஆய்வறிக்கை (Journal of High Energy Physics (JHEP) எனும் அறிவியல் இதழில்) தற்போது வெளியாகியுள்ளது.

பொதுவாக, பெருவெடிப்பில் (Big Bang) தொடங்கும் உலகத்தோற்றம் தொடர்பான கருதுகோள்கள் சில காலம் முன்புவரை ஒரே ஒரு பிரபஞ்சம் இருப்பதாகவே குறிப்பிட்டன. ஆனால், அண்டவெளியில் பல பிரபஞ்சங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட விஞ்ஞானிகள் சமீப காலமாக பதிவு செய்து வந்தனர்.

அது சரி, பல பிரபஞ்ச கருதுகோள் (multiverse theory) என்றால் என்ன?

சுருக்கமாகச் சொன்னால்: ‘முதலில் பெருவெடிப்பு ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து பிரபஞ்சம் விரியத் தொடங்கியது. பிரபஞ்சத்தின் சில இடங்கள் தொடர்ந்து விரிந்துகொண்டே சென்றன. மாறாக, சில இடங்கள் விரியாமல் நின்றுபோயின. அத்தகைய விரிதல் நின்றுபோன இடங்களில் நம் பிரபஞ்சம் மட்டுமல்லாமல், எண்ணற்ற பல பிரபஞ்சங்கள் தோன்றின’ என்கிறது பல பிரபஞ்ச கருதுகோள்.

கடந்த வருடம் ஜூலை மாதம், பெல்ஜியம் நாட்டிலுள்ள கத்தோலிக் யுனிவெர்சிட்டி ஆப் லூவென்னைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் ஹாக்கிங்கின் சக ஆய்வாளரான தாமஸ் ஹெர்டாக், தானும், ஹாக்கிங்கும் இணைந்து எழுதிய பல பிரபஞ்ச கருதுகோளை உலகத்துக்கு முதன்முதலாக அறிவித்தார்.

ஸ்ட்ரிங் தியரி, ஹோலோகிராபிக் பிரின்சிபுல் மற்றும் கணக்குகள் (a mix of string theory, holographic principle, and math problems) ஆகியவற்றால் ஆன இவர்களின் பல பிரபஞ்ச கருதுகோளானது, பேராசிரியர் ஹெர்டாக் தலைமையிலான ஆய்வுக்குழு மற்றும் ஈர்ப்பு அலைகளை ஆய்வு செய்யும் விண்வெளி தொலைநோக்கி களின் உதவியுடன் விரைவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 50 வருடங்களில் நம் பிரபஞ்சம் குறித்த புரிதல் மற்றும் அறிவு எண்ணற்ற மாற்றங்களைக் கண்டுள்ளது. அவற்றில், தற்போது வெளியாகி இருக்கும் பல பிரபஞ்ச கருதுகோள் வரை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story