நெல்லை அருகே பரபரப்பு: அரசு பஸ் தீவைத்து எரிப்பு ‘ராக்கெட் ராஜாவை விடுதலை செய்’ என கோ‌ஷமிட்டு தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு


நெல்லை அருகே பரபரப்பு: அரசு பஸ் தீவைத்து எரிப்பு ‘ராக்கெட் ராஜாவை விடுதலை செய்’ என கோ‌ஷமிட்டு தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 May 2018 3:00 AM IST (Updated: 15 May 2018 5:56 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே அரசு பஸ் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டது. தப்பி ஓடிய மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை அருகே அரசு பஸ் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டது. தப்பி ஓடிய மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு டவுன் பஸ் 

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்து கிராமத்துக்கு நேற்று பகல் 11.25 மணி அளவில் அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை கங்கைகொண்டானை சேர்ந்த டிரைவர் பரமசிவன் (வயது 56) ஓட்டினார். பஸ்சில் மானூரை சேர்ந்த சின்னப்பன் கண்டக்டராக இருந்தார்.

இந்த பஸ் நெல்லை அருகே உள்ள தாழையூத்தை கடந்து வடக்கு தாழையூத்து கிராமத்துக்கு சென்றது. அங்குள்ள கடைசி பஸ் நிறுத்தத்தில் உள்ள காலி இடத்தில் பஸ்சை திருப்புவதற்காக டிரைவர் பஸ்சை பின்நோக்கி திருப்பினார். அந்த பஸ்சில் இறங்குவதற்கு தயாராக 2 பெண் பயணிகள் மட்டுமே இருந்தனர்.

தீவைத்து எரிப்பு 

அப்போது 2 பேர் திடீரென்று பஸ்சை நோக்கி ஓடி வந்தனர். அவர்கள் பஸ்சின் முன்பக்கம் மற்றும் பின்பக்க படிக்கட்டுகள் வழியாக பஸ்சுக்கள் ஏறினர். அவர்களை கண்ட பெண் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது அவர்கள் கற்களை வீசி பஸ் கண்ணாடிகளை உடைத்தனர். பின்னர் கையில் வைத்திருந்த கேன்களில் இருந்த பெட்ரோலை பஸ்சின் இருக்கைகள் மற்றும் அடித்தளத்தில் ஊற்றினர். கண் இமைக்கும் நேரத்தில் பஸ் இருக்கையில் தீவைத்து விட்டு, பஸ்சை விட்டு கீழே குதித்து தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரும் கீழே இறங்கி உயிர் தப்பினர்.

இதனால் பஸ் முழுவதும் தீ மளமளவென்று பரவி வேகமாக எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த பஸ் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். மேலும் தீபரவாமல் தடுத்தனர். இருந்தாலும் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடு போல் காட்சி அளித்தது.

ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் 

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் பஸ்சுக்கு தீவைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பஸ்சை தீவைத்து எரித்த மர்மநபர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

நெல்லையில் பேராசிரியர் கொலை வழக்கில் நாடார் மக்கள் சக்தி இயக்க தலைவர் ராக்கெட் ராஜாவை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் அவரை நெல்லைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதனால் அவருடைய ஆதரவாளர்கள் பஸ்சை தீவைத்து எரித்து விட்டு தப்பிச் சென்று உள்ளனர். மேலும் அவர்கள் சிறிது தூரம் ஓடி, தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

மர்மநபர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இதற்கிடையே போக்குவரத்து கழக மீட்பு வாகனம் மூலம் பஸ் உடனடியாக அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிரைவர்–கண்டக்டர் 

இதுகுறித்து டிரைவர் பரமசிவன், கண்டக்டர் சின்னப்பன் ஆகியோர் கூறுகையில், ‘‘பஸ்சை மீண்டும் நெல்லை சந்திப்பு நோக்கி இயக்குவதற்காக பின்நோக்கி திருப்பினோம். அப்போது 2 பேர் வேகமாக வந்து பஸ்சில் ஏறினார்கள், குடிகாரர்கள் என்று கருதினோம். ஆனால் அவர்கள் கேன்களில் வைத்திருந்த பெட்ரோலை இருக்கை மற்றும் பஸ் அடித்தளத்திலும் ஊற்றி தீவைத்து விட்டு ஓடினர். அவர்களை பிடிப்பதற்காக அவர்களை நிற்குமாறு கூறிக்கொண்டே பின் தொடர்ந்து விரட்டினோம். ஆனால் அவர்கள் வேகமாக ஓடிவிட்டனர்’’ என்றனர்.

அந்த பகுதி பெண்கள் கூறுகையில், ‘‘சினிமாவில் வருவது போல் திடீரென்று பஸ் தீப்பற்றி எரிந்தது. நாங்கள் பெரிய சண்டை நடப்பதாக கருதி வீடுகளுக்குள் முடங்கி விட்டோம். பஸ்சுக்கு தீவைத்து எரிக்கப்பட்ட இடத்தின் அருகில் மின்மாற்றி உள்ளது. அதன் மீது தீப்பற்றி இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும்’’ என்றனர்.

Next Story