மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்


மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2018 10:00 PM GMT (Updated: 15 May 2018 12:31 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நெல்லை, 

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 300–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கலெக்டரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அழைத்து மாற்றுத்திறனாளிகளின் மனுக்களின் மீது கனிவுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

முகாமில் கலந்து கொண்ட பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு முறையாக உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள் என்றும் குறை கூறினார்கள். கண்பார்வையற்றவர்கள் அதிகாரிகள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார்கள். இதைகேட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அவர்களுடைய குறைகளை உடனே நிவர்த்தி செய்யவேண்டும் என்று கூறினார்.

இலவச வீட்டுமனை பட்டா 

கூட்டத்தில், அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தொகுப்பு வீடுகள் கட்டித்தரவேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும், கடந்த முகாமின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், தென்காசி உதவி கலெக்டர் ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் (பொறுப்பு) பழனிக்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story