அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 15 May 2018 11:00 PM GMT (Updated: 15 May 2018 3:20 PM GMT)

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

குளச்சல்,

தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அது வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும், இதனால் மீனவர்கள் யாரும் தென்மேற்கு அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. மேலும், இதுதொடர்பாக குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில்  அறிவிக்கப்பட்டது.  

இதையடுத்து நேற்று குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் கடலில் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட படகு துறைக்கு சென்றனர்.

நேற்றுகாலை முதல் கன்னியாகுமரியில் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டும் படகு போக்குவரத்து நடந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்த்தனர்.

மேலும், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. போலீசார் கடற்கரையில் ரோந்து சென்று கடலில் யாரும் இறங்காதபடி கண்காணித்தனர்.

கன்னியாகுமரி பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 200–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் மீன்பிடித்து வருகின்றன. விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் சென்று பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து வருவார்கள். கட்டுமர மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு மதியம் கரை திரும்புவார்கள்.

வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று கட்டுமர மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களது கட்டுமரங்களையும், மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர். ஏற்கனவே கடலுக்குள் சென்றிருந்த விசைப்படகு மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பும் முயற்சியில் ஈடுபட்டனர். கடலுக்குள் பலத்த காற்று வீசுவதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், சந்தைகளில் மீன் வரத்து குறைந்தது. இதனால், மீன் விலை உயர்ந்து காணப்பட்டது.

Next Story