வனப்பகுதியில் இரும்பு முள்வேலிகளை தாண்டி செல்லும் யானைகள் வனத்துறையினர் அதிர்ச்சி


வனப்பகுதியில் இரும்பு முள்வேலிகளை தாண்டி செல்லும் யானைகள் வனத்துறையினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 16 May 2018 4:30 AM IST (Updated: 16 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஜவளகிரி வனப்பகுதியில் இரும்பு முள் வேலிகளை தாண்டி செல்லும் யானைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சியை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி, ராயக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளது. இங்கு காட்டுயானைகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவைகள் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.

இதில் குறிப்பாக யானைகள், விளைநிலங்களில் உள்ள பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்து வந்தன. விவசாய நிலங்கள் மற்றும் கிராமத்திற்குள் யானைகள், வன விலங்குகள் புகாமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் வனப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் அகழிகள், மின்வேலிகள், இரும்பு முள்வேலிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

மேலும் இந்த பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் யானைகள் அவ்வப்போது வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி பீன்ஸ், முட்டைகோஸ், ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில், ஜவளகிரி வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு முள்வேலிகளை காட்டுயானைகள் தாண்டி செல்கின்றன. கூட்டம், கூட்டமாக வரும் யானைகள் தனித்தனியாக நின்று நிதானமாக இரும்பு முள்வேலிகளை தாண்டுகின்றன. இந்த காட்சி வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன. யானைகள் இரும்பு முள்வேலிகளை தாண்டி செல்வதை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். 

Next Story