மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பேக்கரி கடை அதிபர் கைது


மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பேக்கரி கடை அதிபர் கைது
x
தினத்தந்தி 15 May 2018 11:15 PM GMT (Updated: 15 May 2018 9:31 PM GMT)

திருச்சியில் பெண் தீயில் கருகி பலியான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதாக பேக்கரி கடை அதிபர் கைது செய்யப்பட்டார். தனக்கு தெரியாமல் மகளின் காதலுக்கு உதவியதால் ஆத்திரத்தில் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சி,

திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் சேகர் என்ற விஜயசேகர் (வயது 50). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை வைத்துள்ளார். இவரது மனைவி மல்லிகா (48). இவர்களுக்கு சுவாதி (27) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். சுவாதி பட்டப்படிப்பு முடித்தவர். பேக்கரி கடையில் சேகருக்கு உதவியாக மனைவி மற்றும் மகள் இருந்து வந்துள்ளனர். சுவாதி 7 மாத கர்ப்பிணி ஆவார்.

கடந்த 13-ந் தேதி இரவு பேக்கரியில் இருந்து சேகர் வெளியில் சென்றிருந்ததாகவும், கடையில் மனைவி, மகள் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இரவு 10 மணிக்கு கடையை பூட்டுவதற்காக சேகர் திரும்பி வந்தபோது, கடைக்குள் இருந்து புகை வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பிரிட்ஜ் அருகில் மனைவி மல்லிகாவும், மகள் சுவாதியும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேகர் சேர்த்தார். அங்கு நேற்று முன்தினம் காலை மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணியான சுவாதி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார். உண்மையில் தீ விபத்து ஏற்பட்டுதான் உடல் கருகினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே சாவதற்கு முன்பு மல்லிகா, திருச்சி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியிடம் அளித்துள்ள மரண வாக்குமூலத்தில், “இரவு 10 மணிக்கு பேக்கரி கடையில் இருந்த பிரிட்ஜ் சுவிட்சை அணைக்க முயற்சித்தபோது, தீப்பிடித்து விட்டது” எனக்கூறி இருந்தார்.

இதற்கிடையே மல்லிகா சாவு, சுவாதி உடல் கருகிய விஷயத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸ்காரர் தங்கவேலு புகார் கொடுத்தார். தங்கவேலு புகார் கொடுக்க காரணம் என்ன? என போலீசார் விசாரித்தபோது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஏற்கனவே, போலீசார் சம்பவம் நடந்த பேக்கரி கடைக்கு நேரடியாக சென்று பார்வையிட்டபோது அங்கு பெட்ரோல் வாசனை வந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது இருவர் கட்டியிருந்த சேலையிலும் பெட்ரோல் வாசனையே வந்தது. இதில் ஏதோ மர்மம் உள்ளது என்பதை அறிந்த போலீசார் சந்தேகத்தின்பேரில் மல்லிகாவின் கணவர் சேகரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், இருவரையும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல் வருமாறு:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்த தங்கவேலு என்பவரை சுவாதி காதலித்து வந்துள்ளார். காதலில் உறுதியாக இருந்த அவர்கள், அதற்கு அச்சாரமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். தங்கவேலு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இருவரும் தங்களது வீடுகளில் காதலையும், அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்ட தகவலையும், ‘அலைபாயுதே’ சினிமா பட பாணியில் மறைத்து வந்துள்ளனர். சுவாதி, அவரது பெற்றோர் வீட்டிலும், தங்கவேலு அவரது பெற்றோருடனும் தனித்தனியாக வசித்து வந்தாலும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இதற்கிடையே தங்கவேலு தனது திருமண விஷயத்தை அவரது பெற்றோரிடம் தெரிவித்து விட்டார். ஓரளவு அவர்கள் சமாதானம் ஆகி விட்டனர். ஆனால், தந்தை சேகரிடம் காதல் விஷயத்தை சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதால், சுவாதி அதை தள்ளிப்போட்டு வந்தார்.

அதேவேளையில் சுவாதி அடிக்கடி கணவர் தங்கவேலு வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதன் காரணமாக, சுவாதி கர்ப்பிணி ஆனார். அவரது பெருத்த வயிறு, தாயான மல்லிகாவுக்கு அடையாளம் காட்டி விட்டது. தாய் மல்லிகா, மகள் சுவாதியிடம் கண்டித்து கேட்கவே, ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை கூறி தனக்கு உதவி செய்யுங்கள் அம்மா. நீங்கள் தான் அப்பாவிடம் நைசாக எடுத்து சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து சரியான தருணத்தில் கணவர் சேகரிடம், மகள் சுவாதி நிலை குறித்து மல்லிகா எடுத்துக்கூறி இருக்கிறார். அதைக்கேட்டு பாம்பாக சீறிய சேகர், ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டி தீர்த்தார். மேலும் இது தொடர்பாக சமாதானம் ஆகாமலே இருந்துள்ளார். இருப்பினும் மகள் சுவாதி வீட்டில் இருக்க எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே சுவாதியுடன் தனது மருமகன் வீட்டிற்கு சென்ற மல்லிகா, அங்கு தங்கவேலு மற்றும் அவரது பெற்றோரை சந்தித்து பேசி இருக்கிறார். இப்போதுதான் எனது கணவரிடம் விஷயத்தை சொல்லி இருக்கிறேன். போக போக எல்லாம் சரியாகி விடும் என நினைக்கிறேன். விரைவில் மகள் சுவாதியை உங்கள் வீட்டு மருமகளாக அனுப்பி வைக்கிறேன் என மல்லிகா உறுதி கூறி வந்துள்ளார்.

அன்று இரவு இருவரும் வீட்டுக்கு திரும்பி, பேக்கரி கடைக்கு சென்றுள்ளனர். தாயும், மகளும் எங்கே சென்று வந்துள்ளனர் என்பதை அறிந்த சேகருக்கு ஆத்திரம் கொலைவெறியாக மாறியது. அன்று இரவு 10 மணிக்கு, கடை மூடும் வேளையில் வெளியில் செல்வதுபோல சென்ற சேகர், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மனைவி, மகள் இருவரையும் கொலை செய்ய துணிந்துள்ளார்.

முழுமையான விசாரணை முடிந்து நேற்று மாலை சேகரை, பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான சேகர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனது மகள் காதல் திருமணம் செய்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அத்துடன் மனைவி மல்லிகா என்னுடன் எதுவும் கலந்து பேசாமல் தங்கவேலுவின் குடும்பத்தினரை சந்தித்து சமாதானம் பேசியதும் எனக்கு பிடிக்கவில்லை. அது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே, மனைவி-மகள் இருவரையும் தீர்த்து கட்டுவது என முடிவெடுத்தேன். அதற்கான தருணத்துக்காக காத்திருந்தேன். 13-ந் தேதி இரவு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி, அதை பிரிட்ஜ் அருகில் ஊற்றினேன். கடைக்குள் மனைவி மல்லிகாவும், மகள் சுவாதியும் இருந்தனர். நான், கடைக்கு வெளியில் நின்று கொண்டு, பிரிட்ஜை திறந்து ஒரு பொருளை எடுக்க மல்லிகாவிடம் சொன்னேன். மல்லிகா பிரிட்ஜை திறந்ததும், வெளியில் நின்ற நான் சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரை எரியவிட்டு பெட்ரோல் கிடந்த இடத்தில் வீசினேன். அப்போது குபீரென தீப்பிடித்தது. மல்லிகாவின் சேலையில் தீப்பற்றி எரிந்ததும், அருகில் இருந்த மகள் சுவாதி காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் அவளும் தீயில் கருகினாள். பின்னர் வெளியில் நின்றிருந்த நான் (சேகர்), தற்செயலாக வருவதுபோல நடித்து இருவரையும் காப்பாற்றும் நாடகத்தை அரங்கேற்றி, அவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைதான சேகர், நேற்று மாலை திருச்சி 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வீட்டில் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் சேகர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story