உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணிக்காக சிறப்பு யாகம் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு


உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணிக்காக சிறப்பு யாகம் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 May 2018 4:15 AM IST (Updated: 16 May 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா பகுதியில் நடைபெற உள்ள உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணிக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

திருக்காட்டுப்பள்ளி,

பா.ஜனதா கட்சி சார்பில் கல்லணையில் இருந்து இன்று(புதன்கிழமை) தொடங்கி தஞ்சை வஸ்தாசாவடி பகுதியில் முடிவடையும் வகையில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காவிரியில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவும், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தை பல்கலைக் கழகமாக மாற்ற வேண்டும், ஆறுகள் ஏரிகள் நீர்வழித்தடங்களை தூர்வாரி தடுப்பணைகள் கட்ட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள இ்ந்த பேரணிக்கு பா.ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்குகிறார்.

இந்த பேரணிக்காக நேற்று சிறப்பு யாகம் கல்லணையில் உள்ள காவிரி ஆற்றில் நடைபெற்றது. கல்லணை பயணியர் மாளிகை எதிரில் காவிரியில் பந்தல் அமைக்கப்பட்டு அதில் புனித நீர் அடங்கிய 7 குடங்கள் வைக்கப்பட்டு இருந்தது.

இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். யாகம் முடிவடைந்து தீபாராதனை நடைபெற்ற பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய குடங்களை கைகளில் ஏந்தி சென்று காவிரி ஆற்றில் ஊற்றி வழிபட்டனர். இந்த யாகத்தில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவா சிவக்குமார், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் பி.எஸ்.ராஜா, தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் பூண்டி வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லணையில் இன்று(புதன்கிழமை) உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணியை பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். பேரணி கல்ணையில் தொடங்கி கோவிலடி, திருச்சினம்பூண்டி, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர் வழியாக திருவையாறை சென்று அடைகிறது. அங்கு மாலையில் பொதுக் கூட்டம் நடக்கிறது. 

Next Story