திருவண்ணாமலை மாவட்டத்தில் காட்சி பொருளாக கிடக்கும் குடிநீர் தொட்டிகள்


திருவண்ணாமலை மாவட்டத்தில் காட்சி பொருளாக கிடக்கும் குடிநீர் தொட்டிகள்
x
தினத்தந்தி 15 May 2018 11:00 PM GMT (Updated: 15 May 2018 9:42 PM GMT)

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாக கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பல இடங்களில் மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டிகள் மூலம் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல், பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் குடிநீர் தொட்டிகளை சரியாக பராமரிக்காததால் பல இடங்களில் குடிநீர் தொட்டிகளை பயன்படுத்த முடியாமல் காட்சி பொருளாகவே காணப்படுகிறது.

அதில் சிலவற்றின் விவரம் வருமாறு:-

ஆரணி தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு சான்றிதழ் பெறுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களது வசதிக்காக தாலுகா அலுவலக வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் குடிநீர் நிரப்பப்படாததால் அந்த தொட்டி காட்சிப்பொருளாக உள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலால் தாகத்தில் தவிக்கும் பொதுமக்கள் குடிநீரை தேடி அலைவதுதான் வேதனையாக உள்ளது. எனவே இந்த தொட்டியில் குடிநீர் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள அன்னை தெரசா நகரில் மின்மோட்டாருடன் கூடிய சிறுமின்விசை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மின்மோட்டார் பழுதாகி விட்டதால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் தொலைதூரத்துக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேட்டவலம் பேரூராட்சி 14-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள குடிநீர் தொட்டியின் அடிபகுதி பல மாதங்களுக்கு முன்பு உடைந்து விட்டது. இதனால் தண்ணீர் வீணாக செல்கிறது. கோடைகாலம் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போளூர் நகரில் சிந்தாதிரிப்பேட்டை தெருவில் உள்ள சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டி பல மாதங்களாக பழுதடைந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கோடை வெயிலில் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனை சீரமைத்து குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேபோல் மாவட்டத்தின் பல இடங்களில் பொதுமக்களின் தேவைக்காக பல ஆயிரக்கணக்கான செலவில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டிகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இந்த குடிநீர் தொட்டிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story