பொட்டலப்பொருட்கள் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை; தொழிலாளர் உதவி ஆணையாளர் எச்சரிக்கை


பொட்டலப்பொருட்கள் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை; தொழிலாளர் உதவி ஆணையாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 May 2018 11:15 PM GMT (Updated: 15 May 2018 10:30 PM GMT)

அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை என தொழிலாளர் உதவி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம்,

பொட்டலப்பொருட்கள் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் கோட்டீஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு சில கடைகளில் பொட்டலப்பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தொழிலாளர் உதவி ஆணையாளர் கோட்டீஸ்வரி தலைமையில் துணை ஆய்வாளர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், ஜெயலட்சுமி, மாயவன், அருண் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அங்கு உள்ள பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது 2 கடைகளில் பொட்டலப்பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்ததும், முறையான அறிவிப்பு இல்லாத பொருட்களை ஒரு கடையில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. பின்னர் அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதே போன்று சேலம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளதாக வந்த புகாரின் பேரில் தொழிலாளர் துணை ஆய்வாளர் தாமோதரன், உதவி ஆய்வாளர் ஸ்ரீராம், முத்திரை ஆய்வாளர் ராஜசேகர், ஸ்மைல் திட்ட கள அலுவலர் யுவராஜ், சைல்டு லைன் களப்பணியாளர் மணிமாறன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக களப்பணியாளர் இந்தரஜித் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஓமலூர் தாலுகா கோட்டகவுண்டன்பட்டி பகுதியில் ஆய்வு நடத்தினர்.

அப்போது வாகன பழுது பார்க்கும் கடையில் 2 சிறுவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பது கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து சிறுவர்களை மீட்டு சேலம் குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் கோட்டீஸ்வரி கூறும் போது, பொட்டலப்பொருட்களை அதில் குறிப்பிட்ட விலையை விடுத்து, அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால், 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சிறுவர்களை பணியில் அமர்த்த வேண்டாம் என்றார்.

Next Story