தனியார் படகு குழாமை தடை செய்யவேண்டும் - கம்யூனிஸ்டு கட்சிகள் வலியுறுத்தல்


தனியார் படகு குழாமை தடை செய்யவேண்டும் - கம்யூனிஸ்டு கட்சிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2018 10:31 PM GMT (Updated: 15 May 2018 10:31 PM GMT)

சுண்ணாம்பாறு அருகே தனியார் படகு குழாம் அமைப்பதை தடை செய்யவேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சலீம் ஆகியோர் சுற்றுலாத்துறை செயலாளருக்கு கூட்டாக அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புதுவை சுண்ணம்பாறு பகுதியில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பெருமளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அரசுக்கும் பெரும் வருவாய் கிடைக்கிறது.

பல்வேறு அரசு சார்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இந்த சுண்ணாம்பாறு படகு குழாம் லாபகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இங்கு நீர் விளையாட்டுகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்று இன்னும் பல வளர்ச்சி திட்டங்களை தீட்டி மேலும் வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஆனால் அதற்கு மாறாக சுண்ணாம்பாற்றின் தெற்கு பகுதியில் உள்ள கிளை நீர் நிலைகளில் தனியார் படகு குழாம் அமைப்பதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி சுற்றுலாத்துறை இந்த தனியார் படகு குழாமிற்கு எந்த அடிப்படையில் அனுமதி அளித்திருக்கிறது என்று வியப்பாக இருக்கிறது. மேலும் இந்த தனியார் படகு குழாம் நடத்த இருப்பவர்கள் அரசின் பல்வேறு துறைகளின் அனுமதி வாங்கவில்லை.

மேலும் சுற்றுலாத்துறையின் முழுமையான அனுமதியையும் பெறவில்லை. நீர்நிலை சம்பந்தமான தொழில் புரிவோர் ஆபத்துகளை எதிர்கொள்ளும் அல்லது தடுக்கும் வகையிலும் எந்தவிதமான அறிவாற்றலும், அனுபவமும் இல்லாதவர்களாக உள்ள இந்த தனியார் படகு குழாம் நிறுவனத்துக்கு சுற்றுலாத்துறையின் அனுமதி யார், எப்படி வழங்கினார்கள்? என்பது புதிராக உள்ளது.

ஆகவே தாங்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு சட்ட வரையறைகளுக்கு உட்படாமலும், சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி பெறாமலும் செயல்படவிருக்கின்ற இந்த தனியார் படகு குழாமை தடை செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

Next Story