தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியல்


தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 May 2018 10:36 PM GMT (Updated: 2018-05-16T04:06:57+05:30)

விருத்தாசலம் அருகே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள மு.பரூர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் பொருத்தி 4 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு, குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக ஒரு சில தெருக்களில் மிக குறைந்த அளவே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணகோரி அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையிலும் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலையில் மு.பரூர் பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம்-சிறுவம்பார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் பகுதிக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையேற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story